தேர்தல் பத்திரங்கள்: மற்ற கட்சிகளை விட 3 மடங்கு அதிகம் நன்கொடை பெற்ற பாஜக!
தேர்தல் பத்திரங்கள் மூலம் மற்ற கட்சிகள் அனைத்தையும் விட மூன்று மடங்கு அதிகமாக பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2016-17 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாஜகவுக்கு கிடைத்த அரசியல் நன்கொடையான ரூ.5,271.97 கோடியில் 52 சதவீதத்திற்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. அந்த காலகட்டத்தில் மற்ற அரசியல் கட்சிகள் பெற்றது ரூ.1,783.93 கோடி மட்டுமே.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளை பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது. இது தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் அரசியல் நன்கொடைகளுக்கு நிறுவனங்களுக்கான வரம்பு நீக்கப்பட்ட முக்கியமான காலகட்டத்தில் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“2016-17 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளின் பகுப்பாய்வு” என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 தேசிய கட்சிகள், 24 மாநில கட்சிகள் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 31 கட்சிகளுக்கு, 2016-17 மற்றும் 2021 நிதியாண்டில் கிடைத்த இடைப்பட்ட நன்கொடைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நிதியுதவிக்காக 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், பகுப்பாய்வு செய்யப்பட்ட ஆறு ஆண்டு காலம் போதுமானது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒரு நிறுவனம் தங்களது சராசரி மூன்று ஆண்டு நிகர லாபத்தில் 7.5 சதவீதம்தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக தர முடியும் என்ற நிலை இருந்தது. அந்த வரம்பை அரசியல் நோக்கத்திற்காக நிதிச் சட்டம் 2017 நீக்கியது. 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் பத்திரம் 2018 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 45 மாநில தேர்தல்களும், 2019 பொதுத்தேர்தலும் நடந்துள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், 7 தேசிய கட்சிகளுக்கு மொத்த நன்கொடையாக ரூ.13,190.68 கோடியும், 24 மாநில கட்சிகளுக்கு மொத்த நன்கொடையாக ரூ.3,246.95 கோடியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மொத்த நன்கொடைகள் மற்ற அனைத்து தேசிய கட்சிகளின் மொத்த நன்கொடைகளை விட மூன்று மடங்கு அதிகம் என அந்த அறிக்கை கூறியுள்ளது. பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு கிடைத்த அரசியல் நன்கொடையான ரூ.5,271.97 கோடியில் 52 சதவீதத்திற்கும் அதிகமானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேகாலக்கட்டத்தில், இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம், ரூ.952.29 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. மூன்றாவது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.767.88 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
மாநில கட்சிகளை பொறுத்தவரை, பிஜு ஜனதாதளம் கட்சிக்கு ரூ.622 கோடியும், திமுகவுக்கு ரூ.431.50 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ.383.65 கோடியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ரூ.330.44 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது.
மணிப்பூர் பெண்கள் நிர்வாண வீடியோ... பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
மற்ற அனைத்து தேசிய கட்சிகளின் மொத்த கார்ப்பரேட் நன்கொடைகளை விடவும், பாஜகவுக்கு கிடைத்த கார்ப்பரேட் நன்கொடைகள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஒப்பீட்டளவில் 2017-18 நிதியாண்டில் மட்டும், மற்ற அனைத்து தேசிய கட்சிகளையும் விட 18 மடங்கு அதிகமாக கார்ப்பரேட் நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த காலகட்டத்தில் மாநில கட்சிகளுக்கும் நேரடி கார்ப்பரேட் நன்கொடைகள் 152 சதவீதம் அதிகரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி, தாங்கள் பெற்ற கார்ப்பரேட் நன்கொடைகளை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், 2018-19 நிதியாண்டிலிருந்து 2021-22 நிதியாண்டு வரை கார்ப்பரேட் நன்கொடைகளைப் பெறவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது அதிக நன்கொடைகள் பெறப்பட்டதாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை கூறுகிறது. 2019-20 நிதியாண்டில், ரூ. 4,863.5 கோடி மதிப்புள்ள நன்கொடைகள் தேர்தல் பத்திரங்களாகப் பெறப்பட்டன. 2018-19 நிதியாண்டில் ரூ. 4,041.4 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 3826.56 கோடியும் தேர்தல் பத்திரங்களாகப் பெறப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தனித்தனியாக விசாரிக்கும் பொருட்டு, மூன்று தொகுப்புகளாக உச்ச நீதிமன்றம் அவற்றை கடந்த ஜனவரி மாதம் வகைப்படுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் ஆளுங்கட்சிக்கு ஏகபோகமாக நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு இது தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நிதி அளிப்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் பத்திரம் (Electoral bond) என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு பத்திரமாகும். இந்த பத்திரங்களை இந்தியக் குடிமகன் அல்லது ஒரு நிறுவனம் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கலாம். இப்பத்திரங்கள் ரூபாய் நோட்டுகள் போன்றதே.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951[5] (1951 இன் 43) பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டு, சமீபத்திய பொதுத் தேர்தல்கள் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தது ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாகப் பெற தகுதியுடையவர்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக செலுத்த முடியும். தேர்தல் பத்திரங்களில் நன்கொடையாளரின் பெயரை இருக்காது. இதனால், நன்கொடையாளரின் அடையாளத்தை அரசியல் கட்சி அறிய முடியாது. தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக செலுத்துவபர் மற்றும் பெறும் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.