#BREAKING மணிப்பூர் பெண்கள் நிர்வாண வீடியோ... பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம்; இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்த குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது. அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், “இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம்; இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லும் வீடியோக்களை மறுபகிர்வு செய்வதைத் தடை செய்ய வேண்டும் என ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.