முன் தயாரிப்பில்லாத பத்திரிகையாளர் சந்திப்புக்கு தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கேள்வி கேட்டு குடைந்திருக்கிறார்.  

பிரதமராகப் பதவியேற்ற பிறகு பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தவில்லை என்று நரேந்திர மோடி மீது விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை நீக்கும்விதமாக புத்தாண்டில் பிரதமர் நரேந்திர மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியைத்தான் பாஜக-வில் இருந்தபடியே மோடியை அவ்வப்போது விமர்சித்துவரும் சத்ருகன் சின்ஹா, பத்திரிகையாளர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள் பிரதமரே என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த நேர்காணலை விமர்சித்த சத்ருகன் சின்ஹா மோடியையும் அவர் பாணியில் கிண்டலும் செய்திருக்கிறார். “சார்,  நீங்களே நன்றாக எழுதி, நன்றாக ஆராய்ந்து, பலமுறை ஒத்திகைப் பார்த்து அளித்த டி.வி. நேர்காணலை பார்த்தோம். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். முன் தயாரிப்பில்லாத சூடான கேள்விகளை எதிர்கொண்டு நீங்கள் ஒரு திறமையான தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்க இதுவே நல்ல தருணம். ஆனால், உங்களால் அதை செய்ய முடியாது என்று தெரியும். 

குறைந்தபட்சம் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தைரியம் உண்டா? அந்தத் தைரியம் உங்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறோம். கடந்த காலங்களில் அனைத்து பிரதமர்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களைச் சந்திக்கவில்லையே. இது ஏன் சார்?” என்று மோடியை கிண்டலாக கேள்வி கேட்டிருக்கிறார் சத்ருகன் சின்ஹா.