உத்தரப் பிரதேச பாஜக பெண் எம்.பி. சாவித்ரி பாய் புலே திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

 
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சாவித்ரி பாய் புலே திடீரென சந்தித்துபேசினார். அப்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்புக்கு பிறகு  தன்னை முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் அவர்.
உ.பி.யின் பஹாரியாச் தொகுதியைச் சேர்ந்த சாவித்ரி, காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.  தலித் வாக்குகள் அதிகமுள்ள இந்தத் தொகுதியில் சாவித்ரியின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உ.பி. மாநில கிழக்குப் பகுதியில் தலித் சமூகத்தின் முக்கியத் தலைவராக சாவித்ரி புலே இருந்து வருகிறார். பாஜகவில் தலித்துகளுக்கு மதிப்பில்லை, நசுக்கப்படுகிறார்கள் என்று கடந்த ஓராண்டாகவே சாவித்ரி புலே குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜக எம்.பி. சாவித்ரி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததில் உ.பி. கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரியங்காவின் பங்கு அதிகம் என்று காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த சாவித்ரி பாய் புலே கூறுகையில்,  “காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டின் அரசிலமைப்பை காக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் கரங்களை வலுப்படுத்தி உ.பி.யில் பாஜகவைத் தடுக்கப் போகிறேன்" எனத் தெரிவித்தார்.