டெல்லி பாஜக எம்.எல்.ஏ ரவீந்தர் சிங் நேகி, யமுனை நதியின் தூய்மையை நிரூபிக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்தார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, யமுனை தூய்மை தொடர்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி, யமுனா நதியின் சுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ரீல் (Reel) எடுத்துக்கொண்டிருந்தபோது, ஆற்றில் தவறி விழுந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவம் ஆளுங்கட்சியான பாஜகவிற்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் (AAP) இடையே கடுமையான அரசியல் மோதலைத் தூண்டியுள்ளது.

ஆற்றில் கவிழ்ந்த எம்.எல்.ஏ.

19 வினாடிகள் கொண்ட ஒரு காணொளியில், படபர்கஞ்ச் சட்டமன்ற உறுப்பினரான நேகி, இரு பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு, தண்ணீரைக் குடித்துக் காட்டப் போவதாகக் கூறுகிறார். அடுத்த சில வினாடிகளில், அவர் நிலைதடுமாறி, வழுக்கி ஆற்றுக்குள் விழுகிறார். அருகில் நின்றிருந்த ஒரு நபர் அவருக்கு உதவ முயன்றும் முடியவில்லை. பின்னர், நேகி ஒரு மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு நீருக்குள் இருந்து வெளியேறினார்.

ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ் ஜா இந்தக் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பாஜக தலைவரை கேலி செய்துள்ளார். "வெற்று வாக்குறுதிகளை அளிப்பது தலைநகரின் பாஜக தலைவர்களின் தொழிலாக மாறிவிட்டது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒருவேளை, இந்தப் பொய்யான அரசியலால் வெறுப்படைந்த யமுனை தாயே அவரைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டாரோ என்னவோ" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Scroll to load tweet…

யமுனை ஆற்றின் தூய்மை பற்றிய விவாதம்

யமுனையின் தூய்மை குறித்து இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குறை கூறி வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் ஆம் ஆத்மி தலைவர் சௌரப் பரத்வாஜ், பாஜக தலைமையிலான அரசாங்கம் நதி சுத்தமாக இருப்பதாக நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்தார். யமுனையின் நீர் சுத்தமாக இருக்கிறது என்றால், முதலமைச்சர் ரேகா குப்தாவும் அமைச்சர் பர்வேஷ் வர்மாவும் ஒரு லிட்டர் யமுனை நீரைக் குடித்துக் காட்ட வேண்டும் என சவால் விட்டார்.

இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, ஆம் ஆத்மி தனது பத்தாண்டுகால ஆட்சியில் தோல்வியடைந்த துப்புரவுத் திட்டங்களுக்காக ரூ. 6,500 கோடிக்கும் அதிகமான நிதியை வீணடித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது.