நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தாவின் தலையில் காகம் தட்டியதை பாஜக கிண்டல் செய்துள்ளது.
நாடாளுமன்றதிற்கு வெளியே, ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சத்தாவின் தலையில் காகம் தட்டும் புகைப்படம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா நாடாளுமன்றத்திற்கு வெளியே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது காகம் ஒன்று அவரின் தலையில் தட்டி சென்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டெல்லி பாஜக, : பொய் சொல்பவர்களை காகம் தலையில் தட்டும் என்று கேள்விப்படிருக்கிறோம். இன்று தான், பொய் சொல்லும் நபரை காகம் தாக்குவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளது.
அதே போல் பாஜக தலைவர் தேஜிந்தர் பால் சிங் பக்கா, அந்த புகைப்படத்தை பகிர்ந்து ஆம் ஆத்மி எம்பியை கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவில் "மாண்புமிகு எம்.பி. ராகவ் சத்தாவை காகம் தாக்கிய செய்தியால் என் இதயம் மிகவும் வேதனையடைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் சமர்ப்பித்த நிலையில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தள தலைவர் நாகேஷ்வர் ராவ் சபாநாயகருக்கு தனி தீர்மானத்தை சமர்ப்பித்தார். இந்த நிலையில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால் இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு; எப்போது விவாதம்?
