பிரதமர் மோடி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் இந்தியன் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை கொல்கத்தாவின் சென்ட்ரல் அவென்யு இந்திய வங்கி உறுதி செய்துள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளேட்டில் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாரதிய ஜனதா கட்சி கடந்த 8-ந்தேதி ரூ. 60 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் என இரு முறை தனது ‘554510034’ என்ற கணக்கு எண்ணில் டெபாசிட்செய்துள்ளது. டெபாசிட் செய்யப்பட்ட பணம் முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.60 பகலிலும், இரவு 8மணிக்கு ரூ. 40 லட்சமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எப்படி 8 மணிவரை வங்கி செயல்பட்டது எனத் தெரியவில்லை.
மேலும், பாரதிய ஜனதா கட்சி வேறு கணக்கையும் வங்கியில் வைத்துள்ளது. அதில் நவம்பர் 1-ந்தேதி ரூ.75 லட்சமும், 5-ந்தேதி ரூ.1.25 கோடியாகும் டெபாசிட்செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சூர்ய கன்டா மிஸ்ரா கூறுகையில், “ பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத உத்தரவு முன்கூட்டியே பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்கும். அதனால், இதுபோல் மிகப்பெரிய அளவு தொகையை வங்கியில் டெபாசிட்செய்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
அதே சமயம், மாநில பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறார். “ இந்த குற்றசாட்டை ஏற்க முடியாது. வழக்கமாக கட்சிக்கு வரும் நன்கொடைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அந்த நன்கொடைகளுக்கும் ரசீது வழங்கிவிடுவோம். தேவைப்பட்டால், ரசீது நகல்களை ஆய்வுக்கு தருகிறோம்'' என்றார்.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியான மறுநாள் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பாரதியஜனதா கட்சியின் சதித்திட்டம் என்றார். பிரதமர் மோடி தனது கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை முன் கூட்டியை சொல்லிவிட்டார். இதனால், ரூ. 3 ஆயிரம் கோடிவரை வங்கியில்டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இந்த உத்தரவு குறித்து பிரதமர் மோடி அரசு முன்கூட்டியே ஒரு சில நபர்களுக்கு ரகசியமாக தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், “ கடந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து இம்மாதம் 8-ந்தேதி வரை யாரெல்லாம் ரூ. 5லட்சம் அதற்கு அதிகமாக நகைகள், டாலர்கள், பங்குகள் வாங்கியிருப்பவர்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிடத் தயாரா?. பிரதமர் மோடியின் உத்தரவால், நாட்டில் பெரும் நிதிக்குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
