எழுத்துப் பிழையுன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பதிவிட்ட காங்கிரஸ்.. "வெட்கக்கேடு" என பாஜக விமர்சனம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை பல எழுத்துப் பிழைகளுடன் பதிவிட்டதற்காக காங்கிரஸ் கட்சியை பாஜக தலைவர் ஜேபி நட்டா கடுமையாக சாடினார்.
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான சட்ட திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பாஜகவை விமர்சிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் அரசியலமைப்பின் முன்னுரை குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. ஆனால் அதில் பல எழுத்துப்பிழைகள் இருந்ததை சுட்டிக்காட்டிய பாஜக தேசிய தலைவர் நட்டா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்தியாவின் முன்னுரையைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது என்று அவர் கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மீதும் மரியாதை இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அவரின் பதிவில் "இந்தியாவின் முன்னுரையைக் கூட அறியாத ஒரு கட்சியிடம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியுமா. காங்கிரஸ் = அரசியலமைப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் மீது மரியாதை இல்லாதது. வெட்கக்கேடானது!" என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்து நட்டா எழுதினார். தற்போது அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
G20 உச்சி மாநாடு.. டெல்லியில் பங்கேற்கும் இந்திய அதிகாரிகளின் அடையாள அட்டையும் பாரத் என்று மாற்றம்!!
இப்போது நீக்கப்பட்ட ட்வீட்டை மீண்டும் பகிர்ந்த நட்டா, காங்கிரஸ் கட்சி பகிர்ந்த முன்னுரையில் உள்ள தவறுகளை குறிப்பாக சுட்டிக்காட்டினார். அதன்படி இந்திய அரசியலமைப்பில் உள்ள முன்னுரையை பல எழுத்துப் பிழைகளுடன் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
முன்னதாக இந்திய அரசியலமைப்பில் இருந்து இந்தியா என்ற வார்த்தையை அழிக்க பேனாவை வைத்திருக்கும் ஒரு நபரின் (பிரதமர் மோடியை சித்தரிக்கும்) கேலிச்சித்திரத்தை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. “இந்தியாவை ஒழிப்பது சாத்தியமில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக நட்டா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா 'பாரத்' என்று மாறுகிறதா?
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியாவை பாரத் என்று பெயரிடும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிகின்றன. தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு1 இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறுகிறது. இந்த சூழலில் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறும் சிறப்பு அமர்வின் போது இந்த பிரிவில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பயந்து, நாட்டின் பெயரை மாற்ற, ஆளும் அரசு தேர்வு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “திரு. மோடி தொடர்ந்து வரலாற்றை திரித்து இந்தியாவை, மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் பாரதத்தை பிரிக்க முயற்சிக்கிறது. ஆனால் நாங்கள் நிச்சயம் தடுப்போம்” என்று தெரிவித்தார்.