காலம் செய்யும் மேஜிக்-களுக்கு அளவே கிடையாது. ஆண்டியை அரசனாக்கும், அரசனை ஆண்டியாக்கி அலையவிட்டுடும். அரசியலில் காலம் நிகழ்த்தும் ஆச்சரியங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் எல்லையே இல்லை என்பதற்கான நறுக் உதாரணம்தான் இந்த விஷயம்...

ஆளும் பி.ஜே.பி. அரசை வீழ்த்தி, ஆட்சி பீடத்திலிருந்து இறங்கி ஓட வைக்க எக்கச்சக்க திட்டங்களை தயாரிப்பதுடன், அநியாயத்துக்கு இறங்கி வந்து பெரும் கூட்டணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. எந்த சூழலிலும் காங்கிரஸை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக பி.ஜே.பி.யும் பகீரதபிரயத்னங்களை செய்வதோடு, தனது பரிவாரங்களையும் இறக்கிவிட்டு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. 

தேசிய அளவில் முட்டி மோதி வேற லெவல் வெறித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் இரண்டும் ஒரு இடத்தில் மட்டும் கைகோர்த்து, ஒன்று சேர்த்து தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். அது...கேரளா!வில். ஆம், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்போம்.’என்று ஒற்றைக் காலில் நிற்கிறது. ஆனால் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவையோ ‘இந்து மதத்தின் நம்பிக்கை, சம்பிரதாயத்தினுள் தலையிட்டு அக்கிரமம் செய்ய வேண்டாம்.’ என்று எதிர்க்கின்றனர்.

இந்த சூழலில், கேரளாவில் மார்க்சிஸ்டை அரசியல் ரீதியில் எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியும் ‘பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்க வேண்டாம்.’ என்று எதிர்ப்புக் கொடி பிடிக்கிறது. இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இரண்டு பெண்கள் சபரிமலையில் ஐயப்பன் சந்நிதானம் வரை சென்றனர். இதைத்தொடர்ந்து ஆலயத்தின் நடை சாத்தப்பட்டது. கூடவே ஐயப்ப பக்தர்கள் தேசமெங்கும்  கேரள கம்யூனிஸ் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். இதில் பி.ஜே.பி.யும் இணைந்து கொண்டது. நோக்கம் ஒன்றாக இருக்கும் நிலையில் காங்கிரஸும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது அவர்களுடன். 

சபரிமலை சந்நிதானத்தினுள் இரண்டு பெண்களை அழைத்துச் சென்று அனுமதித்து, இந்து மதத்தை கேவலப்படுத்தியதாக சொல்லி கேரளாவில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள், பந்த், ஆர்ப்பாட்டங்கள் ஆகியன நடந்து வருகின்றன. சில மாவட்டங்களில் கலவரம், களேபரம், கல்வீச்சு, வாகன எரிப்பு என்று பிரளயமே நடந்து கொண்டிருக்கிறது. இவற்றை பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் காங்கிரஸும் இணைந்து நின்று நடத்துகிறது! என்று கம்யூனிஸ்டுகள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர். 

‘வெறும் அரசியலுக்காக சட்ட ஒழுங்கை சீர்கெடுக்கின்றார்கள் காங்கிரஸும், பி.ஜே.பி.யும்.’ என்று பொங்கியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.  எவ்வளவுதான் தடை போட்டாலும் மீறி மீறி எதிர்ப்புகளை இரு கட்சிகளும் நிகழ்த்துவதால், மிரண்டுதான் போய்க் கிடக்கிறது காம்ரேட் ஆட்சி. இந்நிலையில், ‘மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்து, கலவரங்களுக்கும் காரணமாக இருக்கும் பினராயி விஜயனின் ஆட்சியை கலைக்க வேண்டும்.’ என்று ஒரு குரல் கிளம்பியுள்ளதுதான் ஹைலைட்டே!