Asianet News TamilAsianet News Tamil

சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது பாஜக புகார்!

சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது

BJP Complains Against Chhattisgarh Congress Candidates smp
Author
First Published Oct 22, 2023, 12:07 PM IST | Last Updated Oct 22, 2023, 12:07 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அம்மாநில பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே இருமுனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்சிகளுமே வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அம்மாநிலத்தில், எதிர்க்கட்சியான பாஜக, 83 காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்கள் குற்றப் பதிவு விவரங்களை அவர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை எனக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

ஆனால், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் மீது பாஜக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குற்றப் போக்கு உள்ளவர்களுக்கு நாங்கள் சீட் வழங்கவில்லை என்றும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 83 தொகுதிகளுக்கு காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!

தலைமைச் தேர்தல் அதிகாரியிடம் பாஜக அளித்த புகாரில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைத் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் தங்களது குற்றப் பதிவு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜகவின் மாநில சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெய்பிரகாஷ் சந்திரவன்ஷி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தனது 83 வேட்பாளர்களின் குற்றப் பதிவுகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை, கட்சியின் இணையதளம், சமூக ஊடகங்கள் அல்லது தேசிய மற்றும் உள்ளூர் உட்பட இரண்டு செய்தித்தாள்களில் வெளியிடவில்லை. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும் எனவும் ஜெய்பிரகாஷ் சந்திரவன்ஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகக் கூறி, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் பதிவுகளை அறிவிக்காத காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios