ராஜஸ்தானில் ஆட்சியமைக்கும் பாஜக: அடுத்த முதல்வர் யார்?

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ளது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

BJP all set for majority in Rajasthan Vasundhara Raje gajendra singh Shekhawat arjun ram Meghwal are in CM race smp

மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று  முடிந்தது. அதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களை தாண்டி 113 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, பாஜக 40 இடங்களில் அதிகமாகவும், காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் குறைவாகவும் முன்னிலை வகித்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அசோக் கெலாட் முதல்வராக பொறுப்பேற்றார். அம்மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. ஒரே கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு அம்மாநிலத்தில் கிடையாது. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதேபோல், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சிலவும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும், ராஜஸ்தான் மாநிலம் தனது வரலாறையே தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவர் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர். சிபி ஜோஷி நாத்வாரா தொகுதியில் பின்தங்கியுள்ளார். எதிர்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோட் அமீர் தொகுதியில் பின்தங்கியுள்ள நிலையில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா கடும்  போட்டியில் உள்ளார். ஆரம்பத்தில் பின்தங்கிய சச்சின் பைலட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா ஆகியோர் இப்போது முன்னிலை பெற்றுள்ளனர்.

முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜலாவர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஜால்ராபதன் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். 2003ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியை  பிரதிநிதித்துவப்படுத்தும் வசுந்தரா ராஜே வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, ஓரங்கட்டப்பட்டதாக கருதப்பட்ட வசுந்தரா ராஜே, வாக்கு எண்ணும் தேதிக்கு முன்னதாகவே மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதில் இருந்து அவர் முதல்வராவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள்.

டிச.,6ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

கடந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அவர் தனது கோட்டையை தக்க வைத்துக் கொண்டார். அத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகனான மன்வேந்திர சிங்கை தோற்கடித்தார்.

1989, 1991, 1996, 1998, மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் ஜலவர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வசுந்தரா ராஜே, 2003ஆம் ஆண்டில் மாநில அரசியலுக்கு திரும்பினார். அதுமுதல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் முகமாக அறியப்படும் வசுந்தரா ராஜே, 2003ஆம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையும் அம்மாநில முதல்வராக இருந்துள்ளார்.

இந்த முறையும் கூட அவரது ஆதரவளர்கள் சுமார் 40 பேருக்கு பாஜக மேலிடம் சீட் கொடுத்துள்ளது. எனவே, அவர் முதல்வராவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நெருக்கமானவராக அறியப்படும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராகவும் மாநிலத்தின் தலித் முகமாக அறியப்படுபவருமான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோரும் முதல்வருக்கான ரேஸில் உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios