Asianet News TamilAsianet News Tamil

டிச.,6ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது

INDIA alliance meeting will be held on december 6 mallikarjun kharge writes alliance partners smp
Author
First Published Dec 3, 2023, 12:13 PM IST

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.

மொத்தம் 28 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில், கூட்டணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதுதவிர, பிரசாரம், சமூக ஊடக குழுக்கள் என மொத்தம் 4 குழுக்களும் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ராகுலின் பாரத் ஜோடோ... ஆற்றல்மிக்க ரேவந்த்: தெலங்கானாவை தட்டி தூக்கிய காங்கிரஸ்!

மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில் மிசோடம் தவிர எஞ்சிய மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன,. இதில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில்  திரண்டுள்ள கட்சிகள், மாநில அளவில் எதிரும்புதிருமாக இருக்கக் கூடியவை. எனவே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், இந்தியா கூட்டணியானது மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே என கூட்டணித் தலைவர்கள்  தெளிவுபடுத்தினர். இருப்பினும், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டு, இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முரன்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios