Asianet News TamilAsianet News Tamil

நயன்தாரா போட்டோவக் காட்டி... நைசா காதலிக்க ‘வெச்சி’ செஞ்ச போலீஸ்... ஒரு கொள்ளைக் கும்பலே சிக்கியது!

Bihar woman cop poses as Tamil actress Nayanthara to honeytrap gangster succeeds
Bihar woman cop poses as Tamil actress Nayanthara to honeytrap gangster succeeds
Author
First Published Dec 23, 2017, 11:35 AM IST


ஒரு கொள்ளைக் கும்பலைப் பிடிக்க போலீஸார் நூதனமான முறையைக் கையாண்டுள்ளனர். போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் ஒரு கொள்ளைக் கும்பல் நபரிடம் தான் அவரைக் காதலிப்பதாகக் கூறி ஆசை வலையில் விழ வைத்து ஒட்டுமொத்த கும்பலையும் பிடித்துள்ளனர். அதற்காக அந்த பெண் போலீஸ் அதிகாரி தன் போட்டோவாகக் காட்டியது, நயன்தாராவின் கலக்கல் போட்டோக்களைத்தான்! 

பாஜக., தலைவர் ஒருவரின் மொபைல் போனைத் திருடிவிட்டது ஒரு கொள்ளைக் கும்பல். அந்த போனை பயன்படுத்தி மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டது. இது குறித்த புகார் போலீஸுக்குச் சென்றது. போலீஸார் அந்த கும்பலை வளைக்க ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். அதன்படி, ஒரு பெண் போலீஸ் அதிகாரி அந்த கும்பலில் ஒருவனிடம், காதல் வலை வீசினார். அதற்கு நயன்தாரா படத்தை பயன்படுத்திக் கொண்டார். அந்த அழகில் மயங்கிய கொள்ளையனும் அவரிடம் பதில் பேச, அந்த கும்பலே பிடிபட்டது. இந்த சுவையான சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து வடக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள தர்பங்கா மாவட்டம். இங்கெ பாஜக., தலைவரான சஞ்சய்குமார் மஹாதோவின் மிக விலை உயர்ந்த மொபைல் போன் ஒன்று காணாமல் போனது. அதனை மொஹம்மத் ஹஸ்னென் என்பவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவர் தர்பங்கா மாவட்ட போலிஸில் புகார் செய்தார். இந்தப் புகாரை எடுத்துக் கொண்ட உள்ளுர் மூத்த காவல் அதிகாரி மதுபாலா தேவி, தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.  

போலீஸார், ஹஸ்னனை பிடிக்க பல முறை முயன்றனர். ஆனால்,  அவர்களின் கைகளுக்கு அகப்படாமல், தப்பித்துக் கொண்டே இருந்தான். இந்நிலையில்,  திருடப்பட்ட மொபைலின்  அழைப்பு விவரங்கள் அடங்கிய (சி.டி.ஆர்)  பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது,  ஹஸ்னைன் அந்த  மொபைல் போனை  பயன்படுத்துவது தெரியவந்தது.

இதை அடுத்து, அந்த மொபைல் போனைக் கொண்டே அந்தத் திருடனை பிடிக்க வலை விரிக்கப் பட்டது. அதன்படி, அந்தத் திருடனை அடிக்கடி மொபைல் போனில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். சிறிது நாளில் அவனைக் காதலிப்பது போல் பேசத் தொடங்கி வலை விரித்தார். ஆனால், அவன் அதனை முதலில் நிராகரித்தான். அந்தப் பெண் குரலை நம்ப மறுத்தான். ஆனால், பின்னாளில் அவனும் மனம் மாறினான். அந்தப் பெண்ணிடம் தன் காதலைச் சொன்னான்.  

அந்தப் பெண்ணின் போட்டோ ஒன்றை அனுப்பி வைக்குமாறு கோரினான். அவரும் ஒரு புகைப்படத்தை தன் ப்ரொபைல் படமாக வைத்து, அவனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்ததும் அவன் மயங்கிப் போனான். பைத்தியமாகக் காதலிக்கத் தொடங்கினான். தான் அவளை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தான். தர்பங்காவின் ஓர் இடத்தில் சந்திக்க ஏற்பாடானது.   குறிப்பிட்ட இடத்தில் காதலியை சந்திக்க  ஹஸ்னைன் வந்தான். ஆனால் அங்கே மாறுவேடத்தில் மறைந்திருந்த போலீசார் அவனை சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டனர். 

முன்னதாக அந்தப் பெண் ஒரு புர்க்காவை அணிந்து வந்ததால், ஹஸ்னைன் அவரை அடையாளம் காணத் தவறிவிட்டான். பின்னர் மொஹம்மது ஹஸ்னைன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். இதற்காக அவனிடம் பேசியது போலீஸ் அதிகாரி மதுபாலா. அவர் வைத்த ப்ரொபைல் பிக்சர் நடிகை நயன்தாராவினுடையது. 

பிடிபட்ட மொகம்மது ஹஸ்னைன் மற்றொரு திருடனிடம் இருந்து  ரூ.4,500க்கு  அந்த விலை உயர்ந்த மொபைல் போனை வாங்கியதாகக் கூறினான்.  அவன் தந்த தகவலைக் கொண்டு, அந்தத் திருடனையும் போலீசார் கைது செய்தனர்.  

சினிமாவில் காட்டப்படும் சாகசம் போல், ஒரு திருடனைப் பிடிக்க புத்திசாலித்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரி மதுபாலா  இப்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios