Asianet News TamilAsianet News Tamil

கருப்பு பணத்தை முற்றிலும் வேரோடு அகற்றுவேன் - பிரதமர் மோடி உறுதி

biack money-seized-soon
Author
First Published Jan 3, 2017, 9:24 AM IST


உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜ.க. சார்பில் மாபெரும் லக்னோ ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் ‘மகா பரிவர்த்தன் கூட்டம்’ என்ற பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

கருப்பு பணத்துக்கு எதிராக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக நடந்த மிகப்பெரிய இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சுமார் ஒரு மணிநேரம் பேசினார். அப்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக தாக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

“பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நான் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதில்லை. என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிகப்பெரிய பொதுக்கூட்டம் இது. இதை தொலைக்காட்சியில் பார்க்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களது ஆசியும் கட்சிக்கு கிடைக்கும்.

நான் உத்தரபிரதேசத்தில் இருந்துதான் எம்.பி.யாகி இருக்கிறேன். இந்த மாநிலத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை பார்த்து வருகிறேன். இங்குள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு மாநிலத்தின் வளர்ச்சி முக்கியமில்லை.

மத்தியில் எங்கள் கட்சி ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநிலத்துக்கு நிதி கமிஷன் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் நிதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி சரியான முறையில் செலவாகவில்லை. இந்திய மக்கள் தான் எங்களுக்கு உயர் கட்டுப்பாடு. 125 கோடி மக்களை தவிர எங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல.

மத்திய அரசு தற்போது சொந்தமாக முடிவு எடுக்கிறது. நாடு ஒரு பிரதமரை பெற்றுள்ளதுடன், மக்களின் நலன்களை மட்டுமே பிரதானமாக கொண்ட அரசையும் பெற்று இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளது.

எநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்று சேர்ந்தது இல்லை. ஆனால், மோடியை எதிர்ப்பதில் மட்டும் அவர்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். மோடியை நீக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கருப்பு பணத்தை நீக்க வேண்டும் என நான் கூறுகிறேன். மோடியை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என நான் கூறுகிறேன். நாம் எதை நீக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

கருப்பு பணத்தை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுப்பது அவர்களுக்கு தொந்தரவாக தெரிகிறது. அவர்களது நாற்காலிகள் ஆட்டம் காண்பதுதான் அவர்களது பிரச்சனை. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமல்படுத்தப்பட்ட இந்த சூழலில் இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொருத்தமற்றதாக மாறியுள்ளன.

ஆனால் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை நாட்டில் இருந்து முற்றிலும் வேரோடு அகற்றுவேன் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அதுவரை இதற்கான போர் அனைத்தும் வலிமையாகவும், வீரியத்துடனும் தொடரப்படும். இதற்கு உத்தரபிரதேச மக்களாகிய உங்கள் அனைவரின் ஆசியும் எங்களுக்கு தேவை.

ஒருகாலத்தில் சாதி, மதம் போன்றவை முக்கியமானதாக இருந்திருக்கலாம். நீங்களும் சாதி, மத ரீதியான அரசியலை சகித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் வருகிற தேர்தலில் இவை அனைத்தையும் மறந்து விட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios