சினிமா நடிகைகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த திருடனை போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர்.
வீடுகளில் திருடி சம்பாதித்த பணத்தில் காதலிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் நடிகைகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி வந்த திருடனை மடிவாளா காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பஞ்சாக்ஷரி என்பவர்தான் கைது செய்யப்பட்ட நபர். அவரிடமிருந்து 181 கிராம் தங்கம் மற்றும் 333 கிராம் வெள்ளி உட்பட 12.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, மாருதி நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டன. இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் எம்.ஏ.முகமது தலைமையிலான குழு, கைரேகைகள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் போன்ற தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்தது.
ரயில்வே ஊழியரின் மகன் திருடனானார்:
பஞ்சாக்ஷரியின் தாய் ரயில்வே துறையில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது குடும்பத்துடன் சோலாப்பூரில் வசித்து வந்தார். சிறு வயதிலேயே தவறான பாதையில் சென்ற பஞ்சாக்ஷரி, 16 வயதிலேயே குற்றச்சாட்டில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தார். பின்னர் வீடு புகுந்து திருடுவதைத் தொழிலாகக் கொண்ட அவர், குஜராத், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உட்பட 4 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவராக இருக்கிறார். பகல் நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து, இரவில் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களைத் திருடுவார். அதுபோல, மாருதி நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 410 கிராம் தங்கத்தைத் திருடியுள்ளார்.
இதையும் படியுங்கள்... வங்கி பெயரில் போலி IVR அழைப்பு! பெண்ணிடம் ரூ.2 லட்சம் பறித்த மோசடி கும்பல்!
ஆடம்பர வாழ்க்கை-நடிகைகளுக்கு பரிசு:
பஞ்சாக்ஷரிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஆனால் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்கிறார். 2016 ஆம் ஆண்டு, வீடு புகுந்து திருடிய வழக்கில் பஞ்சாக்ஷரியை குஜராத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
'பெண்கள் மீது அதிக ஆசை கொண்ட பஞ்சாக்ஷரிக்கு, அதுவே குடும்பப் பிரச்சினைக்கும் காரணமாக அமைந்தது. திருடிய நகைகளை உருக்கி விற்று, கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். சினிமா நடிகைகளுடனும் இவருக்கு தொடர்பு இருக்கிறதாம். அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி அவர்களை மயக்கி இருக்கிறான்.
இதேபோல், 2012 ஆம் ஆண்டு ஒரு பாலிவுட் நடிகைக்கு 15 லட்சம், ஒரு தொலைக்காட்சி நடிகைக்கு 22 லட்சம் மதிப்புள்ள மீன் பண்ணை மற்றும் கொல்கத்தாவில் உள்ள தனது காதலிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொடுத்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பரிசுகள் மற்றும் வீடு கொடுத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பழைய கதையை பஞ்சாக்ஷரி சொல்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.
