பெங்களூரு பெண் ஒருவருக்கு போலி ஐவிஆர் அழைப்பு வந்தது. ரூ.2 லட்சம் பரிவர்த்தனை குறித்து விசாரித்த குரல் செய்திக்கு, அவர் '1'ஐ அழுத்தினார். உடனே அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் மாயமானது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்டவர் உண்மைகளை மறைப்பதாகச் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரைச் சேரந்த 57 வயது பெண் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து போலி ஐவிஆர் (IVR) அழைப்பைப் பின்பற்றி போனில் சில எண்களை அழுத்தியதால், தனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்தை இழந்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹோசகெரேஹள்ளி அருகே உள்ள தத்தாத்ரேயநகரில் வசிக்கும் சுமித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஜனவரி 20 அன்று மாலை 3.55 மணியளவில் 01412820071 என்ற எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கிரிநகர் போலீசாரிடம் புகர்ர் தெரிவித்தார்.
IVR அழைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. உங்கள் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ரூ.2 லட்சம் மாற்றப்படுகிறது. பரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டது என்றால், 3ஐ அழுத்தவும்; பரிவர்த்தனை உங்களால் செய்யப்படவில்லை என்றால், 1 ஐ அழுத்தவும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள சுமித்ரா, "நான் அப்படி எந்த பரிவர்த்தனையும் செய்யாததால் குரல் குறிப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் எந்த எண்ணையும் அழுத்தவில்லை. குரல் குறிப்பு மீண்டும் மீண்டும் வந்தது. நான் பதிலளிக்கவில்லை. ஆனால், குழப்பமடைந்தேன். பிறகு, நான் அப்படி பரிவர்த்தனை ஏதும் செய்யவில்லை என்பதால் எண் 1ஐ அழுத்தினேன். 'தயவுசெய்து உங்கள் வங்கிக்குச் சென்று மேலாளரை உடனடியாகத் தொடர்புகொள்ளவும்' என்று இரண்டாவது அறிவிப்பு வந்தது. உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டது" என்கிறார்.
"பிறகு என் கணக்கில் ரூ. 2 லட்சம் குறைந்திருப்பதைப் பார்த்தேன். உடனடியாக வங்கிக்குச் சென்று மேலாளரை தொடர்பு கொண்டேன். உடனடியாக சைபர் ஹெல்ப்லைன் 1930க்கு அழைத்து புகார் செய்யுமாறு மேலாளர் என்னிடம் கூறினார். பரிவர்த்தனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். மோசடியில் ஈடுபட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை முடக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் சைபர் ஹெல்ப்லைனில் புகார் செய்தேன்" என்று சுமித்ரா சொல்கிறார்.
கிரிநகர் காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.
விநோதமான IVR மோசடி:
பொதுவாக IVR அழைப்பின்போது, மோசடி செய்பவர்கள் டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள், வங்கிக் கணக்கு எண் அல்லது பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி போன்றவற்றைத்தான் கேட்பார்கள் என்கிறார் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர். "கேட்கும் தகவலைப் பகிர்ந்தால்தான் உடனே பணம் பறிக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஏதும் பகிராமல், 1, 3, 9 என ஏதேனும் ஒரு எண்ணை அழுத்துவதன் மூலம் பணத்தைப் பறிக்க முடியாது" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இதனால், இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் சில உண்மைகளை மறைப்பது போல் தெரிகிறது எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். "அவர் குரல் செய்திக்கு பதிலளித்திருக்கலாம். அவர் எதையும் மறைக்கவில்லை என்றால், இது மிகவும் விசேஷமான வழக்கு என்றுதான் சொல்லவேண்டும். இதில் விசாரணைக்கு பிறகே தெளிவு ஏற்படும்" என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.
