பெங்களூருவில், பாலியல் குறைபாடுகளுக்கு போலி ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் ரூ.48 லட்சத்தை இழந்ததுடன், சிறுநீரக பாதிப்புக்கும் ஆளானார். மற்றொரு சம்பவத்தில், துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் பாலியல் குறைபாடுகளுக்குத் தீர்வு தேடிச் சென்று, போலி ஆயுர்வேத சிகிச்சையால் ரூ.48 லட்சத்தை இழந்ததோடு, சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளாகிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக மற்றொரு சம்பவத்தில், துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு தென்மேற்குப் பிரிவு போலீசார் 'விஜய் குருஜி' மற்றும் யஷ்வந்த்பூரில் உள்ள 'விஜயலட்சுமி ஆயுர்வேதக் கடை' உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆயுர்வேத மோசடி - ரூ.48 லட்சம் அபேஸ்
கடந்த மே 3, 2025 அன்று, பாலியல் பிரச்சனைகளுக்குத் உடனடித் தீர்வு கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சாலையோர ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மூளைச்சலவை செய்த மோசடி கும்பல், மிக அதிக விலையுள்ள மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளது.
தேவராஜ் பூட்டி (Devaraj Booti) ஒரு கிராமுக்கு ரூ.1.6 லட்சம் என்றும் பவன் பூட்டி தைலம் (Bhavan Booti Taila) ஒரு கிராமுக்கு ரூ.76,000. என்றும் கூறியுள்ளனர்.
சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று மிரட்டி, அவரிடமிருந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.48 லட்சத்தைப் பறித்துள்ளனர். இறுதியில், அந்த நபருக்கு பணம் போனதுடன், தவறான மருந்துகளால் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர் நவம்பர் 22 அன்று அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் பிரிவுகள் 123, 316(2), 318(4) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் மிரட்டல்
மற்றொரு சம்பவத்தில், பெங்களூருவில் பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று மர்ம நபர்களை வில்சன் கார்டன் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மத்திய பெங்களூரு போலீசார் அளித்த தகவலின்படி, "கடந்த நவம்பர் 15 அன்று காலை 5 மணியளவில், சாந்திநகர் ஐயப்பன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவரை வழிமறித்த கும்பல், அவரை ஆயுதங்களால் தாக்கியதோடு, கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளது. அந்த நபரிடமிருந்து இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு வெள்ளிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
விசாரணையில் மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


