துணிகள் அழுக்காகிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாணமாக மொபைல் கடைக்குள் புகுந்து 85 மொபைல்களைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துணிகள் அழுக்காகிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாணமாக மொபைல் கடைக்குள் புகுந்து 85 மொபைல்களைத் திருடிய நபர் போம்மனஹள்ளி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரக்கேரை பகுதியைச் சேர்ந்த இக்ரம் உல் ஹசன் என்பவரே கைது செய்யப்பட்ட நபர். அவரிடமிருந்து திருடப்பட்ட மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மொபைல் கடையில் நுழைந்த கொள்ளையன்
மே 9ஆம் தேதி நள்ளிரவில், ஹோங்கசந்திரா பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான ஹனுமான் டெலிகாம் கடையில் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விளக்கம்
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹசன், மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு வேலை தேடி வந்து அரக்கேரை பகுதியில் தங்கியுள்ளார். முதலில் சென்ட்ரல் மாலில் பணிபுரிந்த அவர், பின்னர் அங்கிருந்து விலகி வேறொரு கடையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருட்டில் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
துணிகள் அழுக்காக கூடாது
வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற கடை உரிமையாளர் தினேஷ், மறுநாள் காலையில் கடையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, 87 மொபைல்கள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். முகமூடி அணிந்திருந்த கொள்ளையன், துணிகள் அழுக்காகிவிடக் கூடாது என்பதற்காக நிர்வாணமாகக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளான்.
