பெங்களூரில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு நாயண்டஹள்ளி பந்தரபாளையாவைச் சேர்ந்தவர் ஏழுமலை (43). இவர் தனது மனைவி கமலா (35), மகன்கள் கிரிதர் (14), கிரண் (12), கீதா (10) ஆகியோருடன் ஆதிசின்சினகிரி மடத்துக்கு திங்கள்கிழமை இரவு காரில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது பெங்களூரு ஊரகம், நெலமங்களாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக ஓடிய கார் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அப்பளம் நொறுங்கியது. இந்த விபத்தில் ஏழுமலை, கமலா, கிரிதர், கிரண், கீதா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பேருந்து ஓட்டுநர் பீமாராம் உள்ளிட்ட 2 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.