அரசியல் பண்ணாதிங்க... பாஜக ஆட்சியில் மங்களூருவில் குண்டு வெடிக்கலையா? சித்தராமையா கேள்வி
பாஜகவைச் சாடிய முதல்வர் சித்தராமையா, பாஜக ஆட்சிக் காலத்திலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன என்றும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து, பாஜக அரசியல் செய்ய முயற்சி செய்வதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். சனிக்கிழமை மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஒரு பேருந்தில் வந்த முகமூடி அணிந்த நபரால் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
பாஜகவைச் சாடிய முதல்வர் சித்தராமையா, “பாஜக அரசியல் செய்கிறது. பாஜக ஆட்சிக் காலத்திலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன" என்று கூறினார். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டிப்பதாகவும் இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் சித்தராமையா கூறினார்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை குறித்து சித்தராமையா கூறுகையில், “குண்டுவெடிப்பு நடந்துள்ளது. முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த ஒருவர் பேருந்தில் வந்தார். கவுண்டரில் ரவா இட்லி ஆர்டர் செய்தார். பிறகு ஒரு இடத்தில் சென்று அமர்ந்தார். டைமரை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். காயமடைந்த 9 பேர் பேரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்" என்றார்.
"கூடிய விரைவில், குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவோம்” என்றும் சித்தராமையா உறுதி அளித்தார். காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் ஹுசைனின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பியதாகக் கூறப்படுவது தொடர்பாகவும் சித்தராமையா பதிலளித்தார்.
“தடயவியல் ஆய்வறிக்கை வந்த பின்பு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். நாங்கள் யாரையும் பாதுகாக்க முயற்சி செய்யவில்லை. குற்றம் இழைத்தவர்களுக்குக் கண்டிப்பாக தண்டனை பெற்றுத் தருவோம்'' என்றார். முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, போலீசார் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சியில் தொப்பி அணிந்து செல்லும் நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அவர் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்துள்ளது. மேலும் 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
100 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்! 30 ஆயிரம் கம்மியா கிடைக்குது!