உச்சநீதிமன்றம் அமைத்த லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ) தொடர்ந்து முரண்டு பிடிக்கிறது.
டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், மாநில கிரிக்கெட் சங்கங்களும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்வதாக வருகிற 17–ந் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
அதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம், மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு நிதி பட்டுவாடா செய்யக்கூடாது. ஏற்கனவே நிதியை பெற்ற மாநில சங்கங்கள் அதனை செலவிடாமல் நிரந்தர வைப்பு தொகையாக வைத்து இருக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் உத்தரவிட்டார்.
அத்துடன், லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தினால் இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கையில் அரசு குறுக்கிடுவது போல் அமைந்து விடும். ஆதலால், இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் ஐ.சி.சி. எழுதிய கடிதம் குறித்து அவர் தனியாக பிரமாணப்பத்திரம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு(நாளை) ஒத்தி வைத்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டம் குறித்து பி.சி.சி.ஐ. அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ லோதா கமிட்டியின் ஒரு சில பரிந்துரைகளை எங்களால் அமல்படுத்த முடியாது. திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வாதத்தில் எங்கள் வழக்கறிஞர் கபில்சிபல் எங்கள் தரப்பு வாதத்தை எடுத்துவைப்பார். ஒருமாநிலம் ஒரு ஓட்டு, ஒருநபர் ஒருபதவி, வயதுவரம்பு, எத்தனை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பதவிக்குவரலாம் என பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. மற்றவைகள் ஏற்கப்படவில்லை.
அதேசமயம், பி.சி.சி.ஐ. அமைப்பின் திரிபுரா, ராஜஸ்தான், விதர்பா அமைப்புகள் லோதா பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டன. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்து வாரியத்தலைவர் அனுராக் தாக்கூர் பிராமாணப்பத்திரத்தை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ அமைப்புக்கு திங்கள்கிழமை என்பது உச்சநீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து ஆலோசிக்க கடைசி வாய்ப்பாகும். திங்கள்கிழமையன்று இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பரபரப்பை எட்டியுள்ளது.
