நடிகர் வடிவேலு கிணற்றைக் காணோம் என போலீசில் புகார் கொடுக்கும் ‘காமெடி’ காட்சியை பார்த்து இருப்போம். அதேபோன்று, சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில், இரு பெண்கள் தங்கள் வீட்டில் கட்டப்பட்டு இருந்த கழிப்பறையை காணோம் என போலீசில் புகார் செய்துள்ளனர்.

விரைவாக தங்களின் வீட்டுக் கழிப்பறையை கண்டுபிடித்து தரக்கோரி போலீசிடம் தெரிவித்து உள்ளதால், போலீசார் என்ன செய்வது  என தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். விசாரணையை நடத்த தொடங்கியுள்ளனர். 

பிலாஸ்பூர் மாவட்டம், அமர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பேலா பாய்பாட்டீல்(வயது70). இவரின் மகள் சந்தா(வயது45).  இருவும் ஒரே கிராமத்தில் வெவ்வேறு தெருக்களில் வசித்து வருகிறார்கள்.

விதவைகளான இருவரும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள்தான் வீடுகளில் பஞ்சாயத்து சார்பில் கட்டிக்கொடுத்த கழிப்பறையை காணோம் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து இவர்கள் கூறுகையில், “ கடந்த 2015-16ம் ஆண்டு எங்கள் கிராம பஞ்சாயத்தின் மூலம் கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் இருவரும் மனுச் செய்தோம். எங்கள் மனுக்கள் பேந்த்ரா நகரில் உள்ள ஜன்பத் பஞ்சாயத்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டாகியும் கழிப்பறை கட்டும் பணி நடக்கவில்லை, இதையடுத்து, ஜன்பத் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கடந்த மாதம் சென்று விசாரித்தோம்.

ஆனால், அவர்களோ விண்ணப்பம் செய்தவர்கள் அனைவருக்கும் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டு, பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது’’ என்றார்கள்

இதையடுத்து, அமரப்பூரில் உள்ள சமூக ஆர்வலர் சுரேந்திர பாட்டீலிடம் இருவரும் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் தகவல்  அறியும் உரிமைச்சட்டம் மூலம்அமர்பூரில் கழிப்பறை கட்டும் பணி குறித்து கேட்டு இருந்தார்.

கடந்தவாரம் அதற்கு பதில் வழங்கப்பட்டு இருந்தது. அதில், அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்கும் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது,  பணமும் செலுத்தப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து சுரேந்திரபாட்டீல் கூறுகையில், “ பஞ்சாயத்து தரப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது தெரியவந்தது. காகிதத்தின் அளவில் கழிப்பறை கட்டியதாக காட்டப்பட்டுள்ளது, உண்மையில் எந்த வீட்டிலும் கழிப்பறை கட்டப்படவில்லை, பிரதமர் மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கியும் பயணாளிகளுக்கு சென்று சேரவில்லை. இந்த இரு பெண்கள் மட்டுமின்றி அனைத்து பயணாளிகளுக்கும் இது போல் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.