ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியான கடந்த நவம்பர் 8-ந்தேதிக்கு பின், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வங்கிக்கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள கள்ள நோட்டுகளையும் கருப்புபணத்தையும் ஒழிக்கும் நோக்கில் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யடிசம்பர் 30வரை கெடு விதிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் வங்கியில் வாங்கிய கடனை செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் திருப்பிச் செலுத்தினர். இதில் கணக்கில் வராத பணம், வரி ஏய்ப்பு செய்த பணம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது என்று வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன.
அதன் அடிப்படையில் ஆய்வு செய்ததில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரித்துறையினர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நவம்பர் 9-ந்தேதிக்கு பின் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி, வங்கிகளில் மக்கள் பெற்று இருந்த ரூ. 80 ஆயிரம் கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 60 லட்சத்துக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளில் ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தோம்.
ரூ.16 ஆயிரம் கோடிக்கு அதிமான பணம் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் நீண்டநாட்களாக இயங்காத கணக்குகளில் ரூ. 25 ஆயிரம் கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST