ஆந்திர மாநிலத்தில் தைத்திருநாள் அன்று பாரம்பரியமாக நடைபெறும் சேவல் சண்டை நடைபெறாமல் இருக்க தகுந்த உத்தரவுகளை அனைத்து துறைகளுக்கும் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஐதராபாத் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 26-ந்தேதி வெளியிட்ட உத்தரவில், மகரசங்கராந்தி(தைப்பொங்கல்) அன்று நடக்கும் சேவல் சண்டைக்கு தடை விதித்து  உத்தரவிட்டுள்ள நிலையில், அதை தீவிரமாக நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்ைககளை அரசு எடுக்க வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறுப்பிட்டுள்ளதாவது-

மகரசங்கராந்தி(தைப்பொங்கல்) அன்று ஆந்திராவில் பாரம்பரியமாக நடக்கும் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த மாதம் 26-ந்தேதி ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு உயிரை பந்தயம் வைத்தும், பிற்போக்கு தனமாக கொல்லப்படும் சேவல் சண்டைக்கு மாநிலத்தில் தடை கொண்டு வர வேண்டும். அதற்கு முதல்வராகிய நீங்கள் தலையிட்டு, நடவடிக்ைக எடுப்பது அவசியம். இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதி, தீவிரமாக நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் வேண்டிக்கொள்கிறேன். மேலும், நீதிமன்ற உத்தரவையும் தீவிரமாக அமல்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 1960ம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமைச் சட்டப்படி விலங்ககுள் சண்டை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சேவல் சண்டை என்பது எந்த மதத்திலும் சேராதது, எந்தவிதமான பாரம்பரியம் கொண்டது இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேவல் சண்டை கொடூரமானது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இந்த சண்டையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்தியஅமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதி சேவல் சண்டையை தடை செய்யக் கோரியுள்ளார்.