தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது தண்ணீர் பாட்டில் சுமையைக் குறைக்க, பள்ளிகளில் சுத்தமான நீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

7 முதல் 13 வயது வரையிலான மாணவர்களின் புத்தக சுமை தொடர்பான ஆய்வில் 88 சதவீத குழந்தைகள் அவர்களின் உடல் எடையைவிட 45 சதவீதம் அளவுக்கு கூடுதலாக புத்தகங்களை எடுத்து செல்வதாக அண்மையில் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விதிமுறைகள் குறித்து எந்த பள்ளியும் பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறிதான்?

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைப்பது, வீட்டுப்பாடம் அளிப்பதை தடுப்பது குறித்து அம்மாநில பள்ளி கல்வித்துறைக்கு, பள்ளி கல்வி இயக்குநரும், ஆணையரும் பரிந்துரை செய்திருந்தனர்.

இயக்குநர் மற்றும் ஆணையரின் பரிந்துரையின்பேரில், தற்போது தெலங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தக சுமையால் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, புத்தக பையில் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதால் ஏற்படும் சுமையைக் குறைக்க பள்ளிகளிலேயே சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.