ஆசனவாய் அடைப்புடன் பிறந்த குழந்தைக்கு பெங்களூரு குழந்தைகள் நல மருத்துவமனையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது.
ஓசூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த ஒரு குழந்தை ஆசன வாய் இல்லாமல் பிறந்திருக்கிறது. குழந்தை 2.3 கிலோ எடையுடன் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. இதனால், குழந்தை பெங்களூருவின் பன்னர்கட்டா சாலையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
இந்தக் குழந்தைக்கு உள்ள குறைபாடு இம்பர்ஃபோரேட் அனஸ் என்று அழைக்கப்படுகிறது. "இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளின் வயிற்று வாயுவால் உப்பத் தொடங்குகிறது. குழந்தை அழும் போது, வயிற்று மேலும் விரிவடைவதால் வலி ஏற்படும்" என்று குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் முகுந்தா ராமச்சந்திரா கூறுகிறார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம் என்னும் அவர், "அறுவை சிகிச்சையில் ஏதாவது ஒரு நிலையில் தவறு நேர்ந்தாலும் ஸ்பிங்க்டர் மெக்கானிசம் எனப்படும் மலத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு சேதம் அடைந்துவிடும். அதனால் குழந்தை வாழ்நாள் முழுவதும் மலத்தை அடங்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்" என்று தெரிவிக்கிறார்.
Waste to Wealth: எல்லோரும் இவங்கள மாதிரி செய்யலாம்! தந்தை - மகனைப் பாராட்டிய பிரதமர் மோடி!
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பின் ஒரு வாரத்தில் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது. குழந்தை பிறந்தபோது இருந்த ஆசனவாய் குறைபாடு சரிசெய்யப்பட்டது. 5,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் ஆசனவாய் திறப்பு இல்லாமல் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"இது ஏன் நடக்கிறது என்பதற்கு எந்தக் காரணமும் கூறமுடியவில்லை. இந்தக் குறைபாட்டை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவது அவசியம். அறுவை சிகிச்சை செய்வதும் முக்கியமானது. இதைப்போன்ற அறுவை சிகிச்சைகள் சவாலானவை. அவற்றின் முடிவு எல்லா சமயத்திலும் திருப்தி அளிப்பதாக இருக்காது" என டாக்டர் முகுந்தா ராமச்சந்திரா குறிப்பிடுகிறார்.
