Waste to Wealth: எல்லோரும் இவங்கள மாதிரி செய்யலாம்! தந்தை - மகனைப் பாராட்டிய பிரதமர் மோடி!
நோட்டுப் புத்தகத்தை வீணாக்காமல் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மறுசுழற்சி மற்றும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூருவைச் சேர்ந்த மூத்த இதய நோய் வல்லுநர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் மேற்கொண்ட முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதேபோன்ற முயற்சிகள் பற்றி அனைவரும் பகிரவேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அது மறுசுழற்சி மற்றும் வீணாகும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும், என் மகன் தன் நோட்புக்கில் உள்ள வெற்றுத் தாள்களை விடாமல் கிழித்து எடுக்கிறான். நான் அவற்றைத் தைத்துக் கொடுக்கிறேன். ரஃப் நோட்டாகவும் பயிற்சி நோட்டாகவும் அது பயன்படுகிறது" என்று மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன் கிழிக்கப்பட்ட தாள்களைத் தைத்து வைத்திருக்கும் படத்தையும் இணைத்துள்ளார்.
மருத்துவரின் இந்த ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்த பிரதமர் மோடி, "இது ஒரு நல்ல குழு முயற்சி. இது நிலைத்த வாழ்வு பற்றிய செய்தியைக் கூறுகிறது. உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்" எனக் கூறியுள்ளார். மேலும், "இதேபோன்ற முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மறுசுழற்சி முறை பற்றியும் கழிவுகளை பயன்படுத்தி பயனுள்ளவற்றைத் தயாரிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.