Ayyakannu will be protest against Central Govt

நாடாளுமன்ற கூட்டத்தின்போது போராட்டம் நடத்தி விஸ்வரூபம் எடுக்க செய்வோம். இதன் மூலம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என அய்யா கண்ணு தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாளில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசியதாவது:-

மழை பொய்த்து போனதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என அரசுகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் 29 மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு, அடுத்த மாதம் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும்போது, போராட்டம் நடத்த போகிறோம்.

 விவசாயிகளின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில், யார் பேச்சு வார்த்தை நடத்தினாலும், அதற்கான உத்தரவை பெற்று கொண்டு, வெற்றியோடு திரும்புவோம். அல்லது வீரமரணம் அடைவோம்.

எங்களது கோரிக்கைகள் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வழி வகைகள் செய்ய வேண்டும். 60 வயது நிறைவு பெற்ற விவசாயிகளுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.90 இருந்தது. அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.90 என வழங்கப்பட்டது.

அவர்கள் போராடி, போராடி இன்று ரூ. 35 ஆயிரம் பெறுகின்றனர். ஆகவே குறைந்த பட்சம் கரும்புடன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்.

அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். நதிகளை இணைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.