அயோத்தி விமான நிலையம்: டிச.,30இல் தரையிரங்கும் முதல் விமானம் - முழு விவரம்!
அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் முதல் விமானம் வருகிற 30ஆம் தேதி தரையிறங்க உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. அதில், ஒன்று விமான நிலையம். அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தை பெரிய அளவில் அமைப்பதற்காக மாநில அரசு 821 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது.
அதன்படி, உத்திரபிரதேச மாநிலம், அயோத்தி நகரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மரியதா புருஷோத்தம் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 821 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தி விமான நிலைய கட்டுமானப் பணிகளை, இந்திய விமான போக்குவரத்து ஆணையகம் மேற்கொண்டுள்ளது. திட்ட நிதியாக ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான நிலையத்தில் 24 விமானங்களை ஒரே சமயத்தில் நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பிரதான கட்டிடம் ராமர் கோவில் வடிவத்திலே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீராமரின் சின்னமான வில், அம்பு மற்றும் இதர புராண சின்னங்கள் விமான நிலையத்தில் சுவர்களில் அழகிய வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி விமான நிலையத்திற்கு அனைத்து வானிலை பொது பயன்பாட்டு வகை ஏரோட்ரோம் உரிமத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் கூறுகையில், “விமான நிலையம் 2200 மீட்டர் நீள ஓடுபாதையில் வானூர்தி தரை விளக்குகள், டிவிஓஆர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ஐஎல்எஸ்) உள்ளது. இது இரவு நேரத்திலும் குறைந்த பார்வையில் கூட விமானங்களை இயக்க விமான நிலையத்தை அனுமதிக்கிறது.” என தெரிவித்துள்ளத்யு.
முதல் கட்டமாக 60 நபர்கள் வரை செல்லும் சிறிய வகை விமானங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளன. விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பணிகள் 2025ஆம் ஆண்டு முழுமையாக நிறைவு பெறும்போது பெரிய ரக விமானங்களை இயக்கப்படும் என தெரிகிறது. இங்கிருந்து முதல் கட்டமாக டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து பிற நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில், இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “நாட்டின் பிற பகுதிகளில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ அயோத்தி வருபவர்கள் நகரின் புராதன சிறப்பை விமான நிலையத்திலேயே அறிந்து கொள்வார்கள். அதற்கேற்ப, விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் முதல் விமானம் வருகிற 30ஆம் தேதி தரையிறங்க உள்ளது. வணிக விமானங்களின் சேவைகள் ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“முன்பு சாதாரண மக்கள் கூட இந்த வளாகத்தின் பிரமாண்டத்தைப் பார்க்க செல்லலாம். ஆனால் தற்போது பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.” என உள்ளூர்வாசி சுபம் கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாரும் வெளிப்படையாகப் பேசத் தயாராக இல்லை. ஆனால், 72 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரதான வாயில் தவிர மற்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது சேவை தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா, அயோத்தி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி டிசம்பர் 30ஆம் தேதி முதல் விமானம் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்கும். டெல்லியில் இருந்து அயோத்திக்கு ஜனவரி 6ஆம் தேதியும், அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு ஜனவரி 11ஆம் தேதியும் நேரடி விமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினய் மல்ஹோத்ரா தகவலின்படி, டெல்லியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானம் ஜனவரி 6ஆம் தேதி காலை 11:55 மணிக்கு கிளம்பும். அது அயோத்தி விமான நிலையத்தை மதியம் 01:15 மணிக்கி வந்தடையும். அதே நாளில் அயோத்தியில் இருந்து டெல்லிக்கு அதிகாலை 01:45 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 03:00 மணிக்கு டெல்லி சென்றடையும்.
நான் அன்னைக்கு லீவுங்க; என்னைய எதுக்கு சஸ்பெண்ட் பண்ணாங்க? திமுக எம்.பி. கேள்வி!
ஜனவரி 10 முதல், டெல்லியில் இருந்து அயோத்திக்கு காலை 11:55 மணிக்கும், அயோத்தியில் இருந்து டெல்லிக்கு மதியம் 01:15 மணிக்கும் விமானங்கள் இயக்கப்படும். அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை ஜனவரி 11 முதல் தொடங்குகிறது. இந்த சேவை வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன் மற்றும் சனி) கிடைக்கும். அகமதாபாத்தில் இருந்து காலை 09:10 மணிக்கு புறப்படும் விமானம் 11:00 மணிக்கு அயோத்தியை அடையும். அன்றைய தினம் காலை 11:30 மணிக்கு அயோத்தியில் இருந்து அகமதாபாத்திற்கு விமானம் புறப்படும். டெல்லியில் இருந்து அயோத்தியை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் பயணிகள் அடைய முடியும். அதேசமயம் அகமதாபாத்தில் இருந்து அயோத்தியை அடைய ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.
விமான நிலையத்தை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மறுபுறம், நடைபாதையின் இருபுறமும் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தை இணைக்கும் சாலைகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.