அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும் சீன வீரர்கள் - வைரலாகும் வீடியோ!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து சீன ராணுவ வீரர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார்.
இந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து சீன ராணுவ வீரர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிடுவதற்கு சீன வீரர்களுக்கு இந்திய வீரர்கள் உதவி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவில் இருக்கும் மேசையில், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளும் உள்ளன. எனவே, இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த காட்சிகள் அரங்கேறியிருக்கலாம் என தெரிகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில், நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.2.51 கோடி நன்கொடை அளித்த முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!
இருப்பினும், வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் எப்போது நடந்தது என்பதை நம்மால் உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனாலும்கூட, அந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரிகிறது.