அயோத்தியில் ராமஜென்ம பூமி என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் அந்த நிலத்திற்கு மாற்றாக உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அதன்படி அயோத்தியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு வழங்கியது.அந்த நிலத்தை ஏற்பதாக கடந்த 22ம் தேதி சன்னி வக்பு வாரியம் அறிவித்தது.இந்நிலையில் அந்த நிலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சன்னி வக்பு வாரியத்தின் போர்டு உறுப்பினர்கள் நேற்று அலோசனை நடத்தினர்.

சன்னி வக்புவாரியத் தலைவர் ஜுஃபார் பரூக்கி நிருபர்களிடம் பேசுகையில், “உச்ச நீதிமன்ற தீ்ர்ப்பின் அடிப்படையில் மசூதி கட்டுவதற்கு அரசு ஒதுக்கியுள்ள அந்த 5 ஏக்கர் நிலத்தில் மசூதி ஒன்று கட்டப்படும். மசூதி கட்டும் பணிகளை மேற்பார்வையிட விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என அறிவித்தார்.மேலும் அந்த நிலத்தில் இந்திய- இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், பொது நூலகம், ஏழைகளுக்கான மருத்துவமனை ஆகியவை கட்டப்படும் “ தெரிவித்தார்.