அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்தே, ரமணா, யு.யு.லலித், சந்திரசூட் இடம் பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்ற சர்சசை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. அந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை ராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்க வேண்டும். மற்றொரு பகுதியை இஸ்லாமிய சன்னி வக்பு வாரியத்திற்கும், 3-வது பகுதியை நிர்மோகி அகரா என்ற இந்து அமைப்புக்கும் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இனி அயோத்தி வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் இந்த வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பெய் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பாப்தே, ரமணா, யு.யு.லலித் மற்றும் சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.