ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது என ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்;- ராமர் மற்றும் சீதாதேவியை வணங்கி உரையை தொடங்கினார். இன்று இந்தியா முழுவதும் ஜெய் ராம் என்ற கோஷம் தான் கேட்கிறது. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரயு நதிக்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியுள்ளது.

 

குழந்தை ராமர் பல ஆண்டுகளாக குடிசையில் வைக்கப்பட்டிருந்தார். ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஆகஸ்ட் 15 லட்சக்கணக்கான இந்தியர்களின் தியாகத்தை குறிக்கிறது. அதேபோல், ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் போராடியுள்ளனர். ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. பெரு மகிழ்ச்சியுடன் இன்றைய நிகழ்ச்சியை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். ராமர், தினமும் நமக்கு முன்மாதிரியாக உள்ளது என்றார். 

மேலும், பேசிய பிரதமர் ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்னாள் பல யுகங்களுக்கு நிலைத்திருக்கும். தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்றுகிறது. ராம ராஜ்ஜியத்தில் வேறுபாடுகள் இல்லை, ஏழ்மை இல்லை. அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவோம், அது சுயசார்பு பாரதமாக அமையும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைதது தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம். வேற்றுமையில் ஒற்றுமையை ராமர் கோயில் எடுத்து காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.