நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைத்துவிட்டு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குஜராத் மூத்த அமைச்சர் கணபத்சிங் வாசவா பரபரப்பாக பேசியுள்ளார்.

காஷ்மீரில் புலவாமா பகுதியில் துணை ராணுவ படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் இருந்துவருகிறது.

 இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும் அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான கணபத்சிங் வாசவா தேர்தலை ஒத்தி வைத்துவிட்டு பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.  தலைநகர் அகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணபத்சிங் பேசியதாவது:

வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும். 125 கோடி இந்தியர்களும் இதை விரும்புகிறார்கள். இதற்காக, நாடாளுமன்ற தேர்தல் 2 மாதங்கள் தள்ளி போனாலும் நல்லதுதான். ஆனால், பாகிஸ்தானுக்கு நிச்சயம் பாடம் கற்பித்தே ஆக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை தள்ளி வையுங்கள். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் தேர்தல் நடப்பதற்கு முன்பாக பாகிஸ்தானில் ‘இரங்கல் கூட்டம்’ நடக்கா வேண்டும். அந்த அளவுக்கு நமது பதிலடி இருக்க வேண்டும்.

இவ்வாறு பரபரப்பாக கணபத்சிங் பேசினார்.