அரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஊக்கம் தருவதாக உள்ளது. அதனால், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்லாமல் மீண்டும் வீறுகொண்டு எழ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டியளிக்கையில், கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல்காந்தி விலகினார். மேலும், சில மாநிலங்களில் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியானது குழப்பம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றில் சிக்கியிருந்த மோசமான காலம் தற்போது விலகியுள்ளது. இனிமேல் அரசியலில் இருந்து விலகி நிற்காமல் வீறு கொண்டு எழுந்து செயல்பட வேண்டும்.

இதற்கான அறிகுறிகள் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப் பேரவைத் தோதலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டு கைப்பற்றிய தொகுதிகளை விட இரண்டு மடங்கு தொகுதிகளை காங்கிரஸ் தற்போது கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த முன்னேற்றம் காங்கிரஸ் தொண்டர்களிடையே நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் காங்கிரஸின் சரிவும், கெட்ட காலமும் முடிவுக்கு வந்துவிட்டன. 

இதைக் கருத்தில் கொண்டு மீண்டும் வீறுகொண்டு எழ காங்கிரஸ் கட்சியினர் தயாராக  வேண்டும். இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. இந்த இரண்டு மாநில தேர்தலுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்புகள் ஆளும் பா.ஜ. கட்சிக்கு ஆதரவாக இருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை என்பதுபோல் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளன. மக்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்துள்ளது தெளிவாகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.