Election Results 2022 : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கைப்பற்றும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு, அக்கட்சி மிகவும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இன்று வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளும் இதனை உறுதி செய்கிறது.

உத்திரபிரதேசம் :

403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மையை பிடிக்க 202 இடங்களை பெற வேண்டும். பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டுள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை பிரதிபலிகும் விதமாக இங்கு பாஜக இரு நூறுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடம் பெறும் என்று சொல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சி நூறுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

கோவா :

கோவா சட்டமன்றத் தேர்தலில் இழுபறி நீடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியது. தற்போது வெளியாகியுள்ள முன்னிலை விவரங்களில் பாஜக அங்கு 19 இடங்களில் முன்னிலை வகிக்க காங்கிரஸ் 15 இடங்களிலும், ஆம் ஆத்மி 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை இன்று சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை பாஜக தலைவர்கள் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்றும், இந்த வெற்றியை கட்சித் தொண்டர்களுக்கு அர்ப்பணிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் :

டெல்லியில் ஆட்சி புரியும் ஆம் ஆத்மி பிற மாநிலத் தேர்தல்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை இருக்கும் என்றே எதிரிபார்க்கப்பட்டது. அதனை அடித்து நொறுக்கி தள்ளியிருக்கிறது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போகிறது. ஆட்சியிலிருக்கும் காங்கிரஸை மக்கள் பல தொகுதிகளில் கைவிட்டனர். ஆம் ஆத்மி 89 இடங்களில் முன்னிலை வகிக்க காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அகாலிதளம் 9, பாஜக 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் எப்படி காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததோ அதே போன்று பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று காங்கிரசை வீழ்த்திக் காட்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தங்களின் தவறான முடிவுகளால் தங்களது செல்வாக்கை இழந்துள்ளது.

கட்சியில் உள்ள குறிப்பிட்ட நபர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு மாநில அளவில் செல்வாக்குடன் திகழும் நபர்களை தூக்கி எறிவது காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல. அப்படி காங்கிரஸ் தலைமை மேற்கொண்ட தவறான முடிவுகள் காரணமாகவே தேர்தலில் தொடர் தோல்விகளை அந்த கட்சி சந்தித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் அதுதான் நிகழ்ந்தது.

பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அந்த கட்சியின் முன்னணி தலைவராகவும், முதல்- மந்திரியாகவும் இருந்த கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் ஓரம் கட்டினார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக அங்கு சிறப்பாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் முதல்- மந்திரியான அம்ரீந்தர்சிங் - சித்துவுக்கு இடையே ஏற்பட்ட மோதல், காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. காங்கிரசில் இருந்து விலகி அம்ரீந்தர்சிங் தனிக்கட்சியை தொடங்கினார்.

நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் அம்ரீந்தர்சிங் கூட்டணி அமைத்தார். பஞ்சாப்பை பொறுத்தவரையில் பா.ஜனதாவுக்கு வலுவான அடித்தளம் கிடையாது. இருப்பினும் தனது சொந்த செல்வாக்குடன் வெற்றி பெற்றுவிடலாம் என அம்ரீந்தர்சிங் நினைத்து இருந்தார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டது. அம்ரீந்தர்சிங் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ராகுலும், பிரியங்காவும் பஞ்சாப்பில் முதல்-மந்திரி வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை நிறுத்தினர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அவரை அந்த கட்சி முன்னிறுத்தியது. சீக்கியர் அல்லாத ஒருநபரை முதல்- மந்திரி வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியதை அம்மாநில சீக்கியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவையெல்லாம் ஆம் ஆத்மி வெற்றிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

உத்தரகாண்ட் :

உத்தரகாண்ட் மாநிலத்தில் கருத்து கணிப்பு முடிவுகள் படி பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜகவுக்கு 37 - காங்கிரஸுக்கு 29 என்று சொல்லப்பட்டது. தற்போது வந்துள்ள முன்னிலை விவரங்களில் பாஜக 43 - காங்கிரஸ் 21 என்ற சூழல் நிலவுகிறது.2000-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உதயமானது. அங்கு காங்கிரஸ் ஏற்கனவே தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றி இருந்தது. ஆனால் பா.ஜனதா தற்போது தான் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.

அங்கு புஷ்கர்சிங் தாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரே மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்கலாம் என்று எதிர்பார்த்த காங்கிரசின் முயற்சி தோல்வியில்தான் முடிந்து இருக்கிறது.

மணிப்பூர் :

மணிப்பூரிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கூறின. மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 29 இடங்களையும் காங்கிரஸ் 13 இடங்களையும் பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. ஆனால் இங்கும் பாஜகவே முன்னிலையில் இருக்கிறது.

மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகள் தேவை. அதே நேரத்தில் பா.ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை பிடிக்க 2 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதன் மூலம் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

சரியும் காங்கிரஸ் செல்வாக்கு :

இதன்மூலம் காங்கிரஸ் முதல்வர்கள் கொண்ட மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக (சட்டீஸ்கர், ராஜஸ்தான்) குறைகிறது. இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சி என்ற பெருமையை பெற்றுள்ள காங்கிரஸ், தொடர் தோல்விகளால் தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்து காணப்படுகின்றனர். 2024ல் மக்களவை தேர்தல் வரவுள்ளதால் உடனடியாக அக்கட்சி விழித்து கொள்ள வேண்டியது அவசியம். சோனியா காந்தியும் பலமிழந்த நிலையில் இருக்கிறார். ராகுல் காந்தியையும் உபி. நம்பவில்லை. அமேதியில் அதைப் பார்த்தோம். இப்போது பிரியங்கா காந்தியும் தேர்தலில் தோல்விமுகத்தை சந்தித்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் அது மறக்க முடியாத பக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.