பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் வரி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வை அடுத்து இந்தியாவின் அதன் விலை மடமடவென உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 92 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 85 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் விதிக்கப்படும் உள்ளூர் வரியால் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர ஆரம்பித்தது. தமிழகத்தில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வாழை இலை ஆகியவற்றின் விலை எதிர்பாராத அளவிற்கு உயர்ந்தது நடுத்தரவாசிகளை குலை நடுங்க வைத்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் படும் இன்னல்களை தவிர்க்கும் விதமாக இந்தியாவில் சில மாநிலங்களில் அவற்றின் மீதான வரியை அம்மாநில அரசுகள் குறைத்துள்ளன. 

முதலாவதாக ராஜஸ்தான் அரசு அதன் மாநிலத்தின் வாட் வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட சரிவை சமாளிக்க அசாம் அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்திருந்த கூடுதல் வரியில் இருந்து 5 ரூபாயை குறைத்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் வரியைக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேகாலயா மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வரி குறைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரி 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரி 12 சதவீதமாகவும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெட்ரோல் ரூ.7.40-ம், டீசலுக்கு ரூ.7.10ம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.