ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!
கர்நாடகா மாநில தேர்தலில் மக்களின் மனநிலை குறித்து ஜன் கி பாத் உடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் தேர்தலுக்கு முந்தைய இறுதிக் கருத்துக்கணிப்பு நடத்தி இருந்தது.
இந்த கருத்துக் கணிப்பில் ஆச்சரியமளிக்கும் சில விஷயங்கள் வெளியாகியுள்ளது. எந்த தேர்தலாக இருந்தாலும், இறுதி நேர நிகழ்வுகள்தான் மக்களின் மனதை மாற்றும் என்று கூறப்படுவது உண்டு. அதுபோல்தான் கர்நாடகாவிலும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் மக்களின் மனநிலை மாறி இருக்கிறது என்ற கருத்து வெளியாகி இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ''#கிரைபிஎம்பேசிஎம்'' என்ற வார்த்தையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பயன்படுத்தி இருந்தார். இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்து இருந்தது. இறுதியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது தற்போது கர்நாடகாவில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பஜ்ரங்தளம் அமைப்பினர் அனுமனை வழிபடுபவர்கள். எனவே இந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது திசை திரும்பி இருக்கிறது. இது இந்துக்களின் மனதை பாதிக்கும் என்று காங்கிரஸ் கருதியதால், பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்வதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் கொண்டு வரவில்லை. மாநில அரசு தடை செய்ய முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சமரசம் செய்துள்ளார். ஆனாலும், காங்கிரசுக்கு சூனியமாக இது அமைந்துவிடுமோ என்று பார்க்கத் தோன்றுகிறது.
யாருக்கு எத்தனை இடங்கள்:
இந்த நிலையில்தான் தேர்தல் களமும் மாறி இருக்கிறது. இந்த தேர்தலில் இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பின்படி, பாஜக 100 முதல் 114 இடங்களிலும், காங்கிரஸ் 86-98 இடங்களிலும், ஜேடிஎஸ் 20 முதல் 26 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளில், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க வேண்டுமானால் 113 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவிலும் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பாஜக, காங்கிரசுக்கு எத்தனை சதவீதம் வாக்கு:
பாஜக கட்சி 38 முதல் 40.5 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 38.5 முதல் 41.5 சதவீத வாக்குகளையும், ஜேடிஎஸ் 14 முதல் 16.5 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 04 முதல் 07 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 45 சதவீத வாக்குகளுக்கு மேல் காங்கிரஸ் பெற்றால் கண்டிப்பாக அந்தக் கட்சி அசைக்க முடியாத கட்சியாக உருவெடுக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்தன.
பழைய மைசூர் (ஓல்டு மைசூர்): மொத்தம் இருக்கும் 57 இடங்களில் பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும், 17 இடங்களில் ஜேடிஎஸ்சும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரு மண்டலம்: மொத்தமுள்ள 32 இடங்களில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஜேடிஎஸ் 03 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது தெரியவந்துள்ளது.
மத்திய கர்நாடகா: மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஜேடிஎஸ் 02 இடங்களிலும் வெற்றி என்று தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத் கர்நாடகா: மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
கர்நாடக தேர்தல்.. ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா கருத்துக்கணிப்பு.. மண்டல வாரியான முடிவுகள் இதோ..
மும்பை கர்நாடகா: மொத்தமுள்ள 50 இடங்களில் பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், ஜேடிஎஸ் 01 இடத்திலும் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
கடற்கரை கர்நாடகா: மொத்தமுள்ள 19 இடங்களில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 04 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த முறையுடன் ஒப்பிடும்போது மும்பை கர்நாடகா மற்றும் கடற்கரை கர்நாடகா (Coastal Karnataka) பாஜகவுக்கு கைகொடுக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பசவராஜ் பொம்மை: ஷிகான், ஹாவேரி
கடந்த ஒரு மாத காலத்தில் முதல்வர் போட்டியிடும் தொகுதியின் நிலை மாறிவிட்டது. மும்பை கர்நாடகா பகுதியில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் பாஜக வெற்றி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று சமீபத்திய ஏசியாநெட் நியூஸ் சர்வே காட்டுகிறது. ஹாவேரியில் உள்ள 6 தொகுதிகளில், மார்ச்-ஏப்ரல் கணக்கெடுப்பின் போது பாஜக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட 4 இடங்களுடன் தற்போதைய கருத்துக் கணிப்பில் கூடுதலாக ஒரு இடம் கிடைத்துள்ளது. பாஜக ஹாவேரியில் மொத்தம் ஐந்து இடங்களில் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
சித்தராமையா: வருணா, சாம்ராஜ்நகர்
முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா வருணாவில் போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸ், பாஜக சம அளவில் தலா இரண்டு இடங்களைப் பெறலாம் என்று தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்
எச்டி குமாரசாமி: சென்னப்பட்ணா, ராம்நகரா
பழைய மைசூர் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு மாவட்டமான ராம்நகராவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்பு மூன்று இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சர்வேயில் இரு இடத்தை இழக்கிறது. காங்கிரஸ் கூடுதலாக ஒரு இடத்தைப் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.
ஜெகதீஷ் ஷெட்டர்: ஹூப்ளி, தார்வாட்
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஜெகதீஷ் ஷெட்டார் தாவி இருக்கிறார். தேர்தலில் இவரது பெயர் அதிகமாக எதிரொலித்தது. ஷெட்டாரின் வருகை, மும்பை-கர்நாடகா பெல்ட்டில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், வெற்றி வாய்ப்புகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது. இங்குள்ள 7 இடங்களில் 4 இடங்களில் பாஜகவும், மீதமுள்ள மூன்றை காங்கிரஸ் கைப்பற்றும் என்று தற்போதைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
டி.கே.சிவகுமார்: கனகபுரா, பெங்களூரு ரூரல்
கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஏசியாநெட் நியூஸ் சர்வேயில் மொத்தமுள்ள 4 இடங்களில், ஜேடிஎஸ் இரண்டு இடங்களையும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. தற்போது இங்கு காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்து ஜேடிஎஸ் கட்சிக்கு குறைந்துள்ளது. சமீபத்திய ஏசியாநெட் நியூஸ் சர்வேயின்படி, நான்கில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என்றும் தெரிய வந்துள்ளது.
பிஒய் விஜயேந்திரர்; ஷிகாரிபுரா, ஷிவமோகா
மத்திய கர்நாடகாவில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரர் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன். இதனால் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடியூரப்பா களத்தில் இல்லாவிட்டாலும் இது பாஜகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஏசியாநெட் நியூஸ் சர்வேயில் பாஜகவுக்கு 4 இடங்களும், காங்கிரஸுக்கு இரண்டு இடங்களும், ஜேடிஎஸ்ஸுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.