நாங்கள்  இனவெறியராக இருந்திருந்தால், ஒட்டுமொத்த கறுப்பர்களைக் கொண்டு இருக்கும் தமிழகம், கேரளா, கர்நாடகம் , ஆந்திரா மாநிலங்களோடு ஏன் வாழ்கிறோம்? என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. தருண் விஜய் நிறவெறியுடன் பேசியுள்ளார்.

ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தாக்கு

உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டனர்.  இந்த சம்பவத்துக்கு பின்புலமாக இந்தியர்கள் நிறவெறியுடன் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை மத்தியஅரசு மறுத்தது.

தனியார் சேனல்

இந்நிலையில், இந்தியா-ஆப்பிரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு குழுவின் தலைவரும், எம்.பி.யுமான தருண் விஜயுடன், அல்ஜசீரா சேனல் நேற்று முன்தினம் சிறிய விவாத நிகழ்ச்சி நடத்தியது.

இந்தியர்கள் நிறவெறியர்களா?

அப்போது, நிகழ்ச்சியில் நெறியாளர் ஒரு கேள்வி எழுப்பினார், அதில், “ ஏன் இந்தியர்களை நிறவெறியர்கள் என மக்கள் கூறுகிறார்கள்?, இந்தியர்களே தங்கள் நாட்டு மக்களை நிறவெறியர்கள் என ஏன் கூறுகிறார்கள்?, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட, இந்தியாவுக்கு வரும்போது, இந்தியர்களை நிறவெறியர்கள் என ஏன் கூறுகிறார்கள்? ’’ என்று கேட்டார்.

கறுப்பர்களோடு வாழ்கிறோம்?

அதற்கு பதில் அளித்து தருண்விஜய் பேசுகையில், “  உண்மையில் இந்தியர்கள் நிறவெறியர்களாக இருந்தால், தங்களைச் சுற்றி இருக்கும் கறுப்பு நிற மக்களோடு வாழ்ந்து இருக்க மாட்டார்கள். நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாழும் கறுப்பு இன மக்களோடு ஏன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்?. எங்கள் நாட்டிலும் கறுப்புநிற மக்கள் இருக்கிறார்கள், கறுப்பு இன மக்கள் எங்களைச் சுற்றி இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.