Arvind Kejriwal office in danger of becoming officer less

சி.பி.ஐ. ரெய்டுக்கு பயந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு டஜனுக்கும் அதிகமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனால், பிற மாநிலத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர வேண்டும், அல்லது தனியார் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் கெஜ்ரிவால்தள்ளப்பட்டுள்ளார்.

தற்போது முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகம் அதிகாரிகள் பற்றாக்குறையால் திணறி வருகிறது, இதே நிலை நீடித்தால், இன்னும் சில மாதங்களில் முதல்வர் அலுவலகத்தில் ஒருவர்கூட பணியாற்றாத சூழல் ஏற்படும்.

மோதல் போக்கு

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததில் இருந்தே, முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், பிரதமர் மோடிக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே மோடியை கடுமையாக கெஜ்ரிவால் விமர்சித்து வருகிறார்.

சி.பி.ஐ. ரெய்டு

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் முதல்வரின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமர், துணைச் செயலாளர் தருண்குமார் ஆகியோர் லஞ்சப்புகாரில் சிக்கியதாகக் கூறி சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. இதையடுத்து இரு அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மறுப்பு

அதன்பின், சி.பி.ஐ. ரெய்டு, மற்றும் மத்தியஅரசின் கெடுபிடிகளுக்கு பயந்து அதிகாரிகள் பலர் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்ற மறுத்து வருகிறார்கள்.

12 அதிகாரிகளுடன் பேச்சு

இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், “ முதல்வர் கெஜ்ரிவால் இதுவரை 10 முதல் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அழைத்து பேசிவிட்டார். ஆனால், அவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான முறையில், அவருடைய அலுவலகத்தில் பணியாற்ற முடியாத சூழலில் இருப்பதாகக் கூறி தவிர்த்துவிட்டனர். ஏனென்றால், தானும் மத்திய அரசின் சி.பி.ஐ. ரெய்டில் சிக்க வைக்கப்படலாம் என பயந்து ஒது ங்கிவிட்டனர்.

யாரும் இருக்கமாட்டார்கள்

இதை சூழல் நீடித்தால், முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் ஒரு அதிகாரி கூட வரும் மாதங்களில் இருக்கமாட்டார்கள். வேறுவழியில்லாமல், அலுவலகத்தை நடத்த, டெல்லியைத் தவிர்த்து பிறமாநிலங்களில் இருந்து அதிகாரிகளை அவர் அழைக்க வேண்டி இருக்கும்.

விடுப்பு

 முதல்வரின் சிறப்பு அதிகாரி ஐ.ஆர்.எஸ். அதிகாரி சுகேஷ் ஜெயின், தனது வருவாய் துறை சேவைக்கே மீண்டும் மாறப்போவதாகக் கூறி மனுச் செய்துள்ளார், அவரும் ஏறக்குறைய போய்விடுவார்.

கூடுதல் செயலாளர் கீதிகா சர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், மற்றொரு கூடுதல் செயலாளர் தீபக் விர்மானி மேற்படிப்புக்காக கல்வி விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆதலால், முதல்வரின் அலுவலகப்பணிகளை உடனடியாக கவனிக்க உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய கட்டாயம், அவசரம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.