இந்தியாவில் கொரோனா பாதிப்பு 63 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 2109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்ததாக குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து 8 ஆயிரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 

மகாராஷ்டிரா, குஜராத்துக்கு அடுத்து அதிகமான பாதிப்பு டெல்லியில் தான். டெல்லியில் 6923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 6535 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் பெரியளவில் இல்லை. அதிகமானோருக்கு பரவலாக பரவுகிறதே தவிர, அதன் வீரியம் பெரியளவில் இல்லை. அதனால் உயிரிழப்பு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவுதான். 

இந்தியாவில் நிறைய பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டதற்கான அறிகுறியே இல்லாமல், டெஸ்ட்டில் தொற்று உறுதியாகிறது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து தெரிவித்து கொண்டிருக்கிறது. தேசியளவில் இதுதான் நிலைமை. அதன் வீரியம் பெரியளவில் இல்லை. அதனால் இறப்பு விகிதம் குறைவாகவும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75% பேருக்கு அறிகுறியே இல்லை என்று தெரிவித்துள்ளார். அறிகுறி இல்லாத 75% பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.

கொரோனாவின் வீரியம் அதிகமாக உள்ள 1476 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மற்றவர்களுக்கு கொரோனா மையங்களிலும் அவரவர் வீடுகளிலுமே சிகிச்சையளிக்கப்படுவதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.