அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர்: ஜிஎஸ்டி விவகாரத்தில் பாஜக பதிலடி!
ஜிஎஸ்டி தொடர்பான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஜிஎஸ்டி அமலாக்க இயக்குநரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், வரி செலுத்தும் சிறு வணிகர்களைக் கூட மத்திய அரசு கைது செய்ய முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு தொழிலதிபர் ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்றால், அவரை அமலாக்கத்துறை நேரடியாக கைது செய்யும்; அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தொடர் பொய்யர் என விமர்சித்துள்ளது. மேலும், நேர்மையான வரி செலுத்துவோர் கூட சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு ஜிஎஸ்டி மிகவும் சிக்கலானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை பரப்பி வருகிறார். இது உண்மையல்ல. ரூ.40 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வணிகர்களிடையே அச்சத்தையும் பீதியையும் பரப்பி வரும் தொடர் பொய்யர் கெஜ்ரிவால். இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை எளிமைப்படுத்திய, சீர்திருத்தமான ஜிஎஸ்டி அமைப்பில் குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் உருவாக்க அவர் முயற்சிக்கிறார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்துடன் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பை (GSTN) அரசாங்கம் சேர்த்துள்ளது. அதாவது, வரி ஏய்ப்புக் குற்றவாளிகளைப் பிடிக்கவும், அவர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிக்கவும் ஜிஎஸ்டி அமைப்பானது அமலாக்கத்துறையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். பணமோசடி மூலம் பாதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை மீட்க இது உதவும். ஜி.எஸ்.டி.என் எனும் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பானது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கான ஐடி சேவைகளை வழங்கு வருகிறது. GSTN என்பது வரி விதிக்கும் அதிகாரம் படைத்ததோ அல்லது அமலாக்க நிறுவனமோ அல்ல. இது வரி ஏய்ப்பு மற்றும் மோசடியைத் தடுக்க உதவும் வசதி மற்றும் சேவை வழங்கும் அமைப்பு.
நேர்மையான வரி செலுத்துவோர் கூட சிறையில் அடைக்கப்படும் அளவுக்கு ஜிஎஸ்டி மிகவும் சிக்கலானது என்று கெஜ்ரிவால் தவறான அனுமானத்தை உருவாக்கி வருகிறார். இது உண்மையல்ல. ஜிஎஸ்டி சட்டம் வரி செலுத்துவோருக்கு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தீர்வுகளை வழங்குகிறது. 40 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு?
ஒரு காலத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டக்காரர் என்று சொல்லிக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது ஊழலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மத்திய அரசிடம் கோருவது வருத்தமளிக்கிறது. ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் தன்னை ஆதரித்த இந்திய மக்களின் நம்பிக்கைக்கு அவர் துரோகம் இழைத்து, தொடர் பொய்யராகவும், ஊழல்வாதிகளின் பாதுகாவலராகவும் மாறிவிட்டார்.” இவ்வாறு அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.