மக்களுக்கு ஒரு நியாயம்?, அரசியல் கட்சிகளுக்கு ஒரு நியாயமா?, அரசியல் கட்சிகளின் நன்கொடை குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

வரிஇல்லை

அரசியல் கட்சிகள் தங்களிடம் இருக்கும் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும் போது வரி விதிக்கப்படாது என வெள்ளிக்கிழமை மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நியாயமா

 தனி நபர் ஒருவர் வங்கியில் ரூ. 2.50 லட்சம் டெபாசிட் செய்தால், அவரிடம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்துகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் தங்களிடம் இருக்கும், ரூ. 2500 கோடியை கூட வங்கியில் டெபாசிட் செய்தால், கூட அவர்களிடம் விளக்கம் கேட்க மாட்டோம், விசாரிக்க மாட்டோம் என மத்தியஅரசு கூறுவது தவறானது. சாமானிய மக்களுக்கு ஒரு நியாயம், கட்சிகளுக்கு ஒரு நியாயமா. 

அதிர்ச்சி

பிரதமர் மோடியை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்துவிட்டு வந்தபின்தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதால் ஒரே அதிர்ச்சியாக இருக்கிறது.

தனி ஆணையம்

அரசியல் கட்சிகளின் நன்கொடை குறித்து விசாரிக்க ஒரு சுயமான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த நன்கொடைகள் வந்த வழிகள் குறித்து தீர ஆய்வு செய்யப் பட வேண்டும்

ரத்து

கடந்த மாதம் 8-ந்தேதிக்கு பின், நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் பெற்ற நன்கொடைகள் குறித்த விவரங்களை மத்தியஅரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக நன்கொடை பெறும்போது, வரிவிலக்கு அளிப்பதை நீக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வசூலிக்கும் ஒவ்வொரு காசு குறித்த விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

மோடி உதவி

அரசியல் கட்சிகள் தங்களிடம் உள்ள கருப்ப பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக பிரதமர் மோடி உதவி செய்து வருகிறார். இதற்காக அப்பாவி மக்கள் தாங்கள்

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பெற வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் வரிசையில் நிற்க வைத்துள்ளார். 

ரகசிய ஒப்பந்தம்

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் செய்த ஊழல் விவரங்களை வெளியிடப்போவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மோடியுடன், ரகசியமாக ஒப்பந்தம்செய்து கொள்ளும் பணியைத் தவிர்த்து விட்டு அந்த ரகசியத்தை வெளியிடவேண்டும் 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.