குழந்தை ராமரை தரிசிக்க காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்: 8000 போலீசார் குவிப்பு!
குழந்தை ராமரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையடுத்து, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனத்துக்காக இன்று கோயில் திறக்கப்பட்டது. பிராண பிரதிஷ்டையின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என விவிஐபிக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுமக்கள் தரிசனத்துக்காக கோயில் இன்று திறக்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கானவர்கள் குழந்தை ராமரை தரிசிக்க குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அத்துமீறி உள்ளே நுழையாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், கூட்ட மிகுதியால், தடுப்புகளை உடைத்து அடித்து பிடித்துக் கொண்டு பொதுமக்கள் கோயிலின் உள்ளே நுழைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அயோத்தியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் தற்போது சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளாட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்வதற்காக 8000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநில முதன்மைச் செயலாளர் உள்துறைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜி பிரசாந்த் குமார் ஆகியோர் ராமர் கோயிலுக்குள் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
ஏப்.16ஆம் தேதி மக்களவைத் தேர்தல்? தேர்தல் ஆணையம் விளக்கம்!
காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் தரிசனத்துக்காக ராமர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.