ஏப்.16ஆம் தேதி மக்களவைத் தேர்தல்? தேர்தல் ஆணையம் விளக்கம்!
ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடப்பாண்டில் நடைபெறவுள்ளாது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 2024 மக்களவை தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. மக்களவை தேர்தல் 2024க்கான பூர்வாங்க பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி சூசகம்!
இதுகுறித்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 16ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. “தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி, இந்த தேதியானது அதிகாரிகளின் செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தப்படுகிறது.” என தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஜூன் மாதம் மீண்டும் பதவியேற்றது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.