இந்திய பாகிஸ்தான் எல்லையில் 29 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த தேஜ் பகதூர்யாதவ் என்பவர் தனக்கு மட்டுமல்லாமல், தனது பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்றும்  அரசு உணவுக்காக வழங்கும் பணத்தைக் கூட உயர் அதிகாரிகள் அபகரிக்கிறார்கள் என்று நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோ பதிவில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

நாட்டுக்காக பனியிலும், வெயிலிலும் காத்திருக்கும் நமது சகோதரர்களின் இந்த கண்ணீருக்கு யார் காரணம்? பிரதமர் மோடி தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடினால் மட்டும் போதாது. ராணுவத்தினரின் சோகங்களையும், துயரங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த அவல நிலைக்கு அரசும், அதிகாரிகளும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று அந்த வீரர் உருக்கமுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வீரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பதாக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

அதேபோல் எரிபொருட்களையும் சந்தை விலையை விட பாதி விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். துணை ராணுவ படை வீரர்களின் முகாம்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இந்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹும்ஹமா எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முகாமிற்கு அருகில் உள்ள கடைகாரர்கள் பெட்ரோல், டீசல் குறைந்த விலைக்கு வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.