தாயகம் காக்க தன்னலம் நீங்கி உறவுகளின் பிரிவுகளை ஏற்று வெயில், பனி பாராது, ரத்தம் சிந்தி எல்லையில் ராணுவ வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னுயிரையும் தாய் மண்ணிற்காக இழக்கத் துணிந்து இந்தியத் திருநாட்டினைப் பாதுகாக்க இந்தச் சணமும் ராணுவத்தினர் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

சகமனிதனுக்குக் கிடைக்கப்பெறும் சாதாரண அடிப்படை சந்தோஷங்களைக் கூட தனக்குள்ளே அழுத்திவைத்துக்கொண்டு  சுற்றம், சூழல் எதையும் பொருட்படுத்தாது, தன்னை மெழுகாக்கி, தேசப்பற்றைத் திரியாக்கி, தியாகச் சுடராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் நம் இந்திய ராணுவ வீரர்கள்.

ஆனால், நாம் அவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்தித்தது இல்லை. அரசும் கடமைக்கு கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் பாதுகாப்பு ஒதுக்குவதோடு சரி அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று அறிவதில்லை.

கோடிக்கணக்கில் கிரிக்கெட், உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், செலவு செய்யும் அரசு ராணுவ வீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கவனிப்பதே இல்லை.

எல்லையில் 29 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த தேஜ் பகதூர்யாதவ் என்பவர் தனக்கு மட்டுமல்லாமல், தனது பிரிவைச் சேர்ந்த ராணுவவீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை, அரசு உணவுக்காக வழங்கும் பணத்தைக் கூட உயர் அதிகாரிகள் அபகரிக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இதைக் கேட்கவே வேதனையாக இருக்கிறதே? நாட்டுக்காக பனியிலும், வெயிலிலும் காத்திருக்கும் நமது சகோதரர்களின் இந்த கண்ணீருக்கு யார் காரணம்? பிரதமர் மோடி தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடினால் மட்டும் போதாது. ராணுவத்தினரின் சோகங்களையும், துயரங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த அவல நிலைக்கு அரசும், அதிகாரிகளும் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவில் உள்ள டி பி யாதவ் என்ற வீரர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் யாதவ், தங்களுக்கு ரொட்டியும், டீயும் உணவாக வழங்கப்படுவதாகக் கூறுகிறார். இதற்கு வேகவைத்த பருப்பு வழங்கப்படும் என்றும், காய்கறிகளோ, ஊறுகாயோ கிடைக்காது என்றும் குறிப்பிடுகிறார். இதை சாப்பிட்டு விட்டு எப்படி வீரனாக இருக்க முடியும் என்றும், மோசமான தட்பவெப்பம் நிலவும் எல்லைப் பகுதியில் 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே இருக்க முடியும் என்றும் யாதவ் கேள்வி எழுப்புகிறார். 

மேலும், வீரர்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றிலேதான் தூங்கச் செல்வதாக அதிர்ச்சித் தகவலையும் அவர் வெளியிடுகிறார். இதுதான் தங்களது அவலநிலை என்றும், இது சிப்பாய்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் யாதவ் வேதனையுடன் பேசுகிறார். தான் வெளியிடும் இந்தக் காட்சிகள் வெளியாகும்போது தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் அதில் யாதவ் கூறுகிறார். இந்தக் குறைகளைப் போக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவில் அவர் கோரிக்கை விடுக்கிறார். 

யாதவ் பேசி முடிந்த பிறகு, எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் ரொட்டியும், டீயும் வழங்கப்படும் காட்சிகள், பருப்பு வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், ரொட்டி தயாராகும் காட்சிகள் ஆகியவை அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோக்கள் குறித்து டுவிட்டரில் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உரிய விசாரணை நடத்த உள்துறை செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.