டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட நிர்பயாவிற்கு நீதி கிடைக்கக்கோரியும், நாட்டில் பெண்களுக்கு எதிரே பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபட்டோருக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அண்மையில் அவர் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் நிர்பயா வழக்கில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டுமென மௌன விரதத்தை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.

நீதி கிடைக்காமல் போகுமேயானால் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்க இருப்பதாகவும் கடிதத்தில்  எழுதியிருக்கிறார். ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தை மக்கள் வரவேற்றதற்கு காரணம் நீதித்துறையில் நிலவும் தாமதமே என்று கூறியுள்ளார். மேலும் நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் நீதித்துறையின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தும் என மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில் நேற்றில் இருந்து மௌன விரதத்தை அன்னா ஹசாரே தொடங்கியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி கிராமத்தில் மௌன விரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.