அன்னியச் செலாவணி மோசடி: அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி மனைவி ஆஜர்!
அன்னியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி மனைவி டினா அம்பானி ஆஜரானார்

அன்னியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவும், விசாரணைக்காகவும் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த திங்கள் கிழமையன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி, தனது வாக்குமூலத்தை பதிவு செய்த நிலையில், அவரது மனைவி டினா அம்பானி இன்று ஆஜராகியுள்ளார். இந்த வார இறுதியில் அனில் அம்பானி மீண்டும் ஆஜராகி தனது தரப்பு இறுதி வாக்குமூலத்தை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனில் அம்பானி மற்றும் அவரது மனைவி டினா அம்பானி மீதான அன்னியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கானது, கணக்கில் வராத சொத்துகளை வெளிநாட்டில் வைத்திருப்பது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பணப் பரிமாற்றம் தொடர்பானது என அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிராவுக்கு அடுத்து பீகாரா? ஹிண்ட் கொடுத்த பாஜக!
ஜெர்சி, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் உள்ள சில நிறுவனங்களுடன் அனில் அம்பானியின் தொடர்புகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரித்து வருவதாக தெரிகிறது. யெஸ் வங்கியின் விளம்பரதாரர் ராணா கபூர் மற்றும் சிலருக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக 2020ஆம் ஆண்டில் அனில் அம்பானியை ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இரண்டு சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.814 கோடிக்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத தொகைக்கு ரூ.420 கோடி வரிஏய்ப்பு செய்ததாக அனில் அம்பானிக்கு கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த நோட்டீஸ் மற்றும் அபராத தொகை விதிக்கும் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து கடந்த மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.