உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க குடும்பத்துடன் வந்த ஆந்திர பெண் மாதவி, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் பயந்துபோய் பாதியில் திரும்பினார். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்தது. இதை எதிர்த்தும் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கோயிலின் பாரம்பரியத்தை மீறியது என்று பக்தர்கள், தந்திரி குடும்பத்தினர், பந்தளம் அரச குடும்பத்தினரும் கருதினர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாஜக, ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப பக்தர்கள் சங்கம், பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் சார்பில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெண்களை பக்தர்கள் தடுத்து அனுப்புகின்றனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கூட, பெரும்பாலான பெண்கள் மரபை மீறி ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பவில்லை. குறைவான எண்ணிக்கையிலான பெண்களே ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களையும் ஐயப்ப பக்தர்கள் தடுத்து அனுப்புகின்றனர். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் பரபரப்பான சூழலில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முதன்முறையாக நடை திறக்கப்பட்டதால் பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.

பெண்களை தடுத்து நிறுத்த ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் யாரும் கோயிலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நிலக்கல், பம்பா, எரிமேலி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் கார்களை சோதனையிட்டு பெண்கள் இருந்த கார்களை திருப்பியனுப்பினர். 

சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்தோடு ஐயப்ப பக்தர்களும், போராட்டக்காரர்களும் சாலையின் இரு பகுதிகளிலும் காத்திருந்தனர். 

இந்த பரபரப்பான சூழலில் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து மாதவி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க பம்பைக்கு சென்றார். அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் காட்டுப்பாதையில் சன்னிதானத்துக்கு சென்ற அவரை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பாதையை மறித்து மாதவியையும் அவரது குடும்ப பெண்களையும் மலையேற அனுமதிக்கவில்லை. 

இதை அறிந்து போலீஸார் அங்கு வந்து, மாதவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து மேலே அழைத்து சென்றனர். ஆனால் சில மீட்டர் தூர இடைவெளிகளில் ஆங்காங்கே நின்ற போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் ஒரு இடத்தில் மாதவியின் குடும்பத்தினரை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள் கீழே இறங்க வற்புறுத்தினர். இதையடுத்து பயந்துபோன மாதவியும் அவரது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்யாமல் பம்பைக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு மேலும் அதிகமானது.